சென்னை: ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள 'ஓ மணப்பெண்ணே' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்டோபர் 18) சென்னையில் நடைபெற்றது.
இதில், நடிகர்கள் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், இயக்குநர் கார்த்திக் சுந்தர், இப்படத்திற்கு வசனம் எழுதிய தீபக் சுந்தரராஜன், இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரியா பவானி சங்கர் மகிழ்ச்சி
இந்நிகழ்ச்சியன் தொடக்கத்தில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுந்தர், "தெலுங்கில் வெளியான 'பெல்லி சூப்புலு' நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தமிழில் ரீமேக் செய்வது சவாலானது. தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றதுபோல் சில விஷயங்களை மாற்றியுள்ளோம். படத்தை 30 நாள்களில் எடுத்து முடித்தோம்" என்று கூறினார்.
'ஓ மணப்பெண்ணே' படக்குழுவினர் இதையடுத்து, பிரியா பவானி சங்கர், "ரொம்ப நாள்கள் கழித்து ஊடகங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. படம் உங்கள் கையில் இன்னும் சில நாள்களில் வந்தடையும். பார்த்துவிட்டு கருத்துகளைத் தாருங்கள். இப்படத்தில் எனது கதாபாத்திரம் நன்றாக வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
விடாமல் துரத்திய படம்
தொடர்ந்து பேசிய நடிகர் ஹரீஷ் கல்யாண், "எனது 'கசட தபற' படத்தைப் பார்த்து என்னைப் பாராட்டியவர்களுக்கு நன்றி. இப்படம் 2018ஆம் ஆண்டே நான் நடிப்பதாக இருந்தது. பிறகு அங்கே இங்கே சுற்றி மீண்டும் என்னிடம் வந்தது.
சுரேஷ் சந்திராவுக்கு பூங்கொத்து வழங்கிய ஹரீஷ் கல்யாண் இப்படத்தின் கதாபாத்திரம் போலத்தான் நான் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன். குடும்பத்துடன் பார்த்து என்ஜாய் பண்ற படமாக இருக்கும். ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாவதால் அதிகப்படியான ரீச் கிடைக்கும். பிஸியான நேரத்திலும் இங்கு வந்த பிரியாவிற்கு நன்றி" என்றார்.
இந்நிகழ்வின் முடிவில், 30 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் அஜித்திற்கும் திரைத் துறையிலும் பிஆர்ஓவாக பணியாற்றும் சுரேஷ் சந்திராவுக்கு தனது சார்பில் ஹரீஷ் கல்யாண் மரியாதை செய்தார். மேலும் விழா மேடையில் பிஆர்ஓ சுரேஷ் சந்திராவிடம் வலிமை அப்டேட் கேட்ட ஹரீஷால் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
இதையும் படிங்க: பாசத்துடன் வெளியான 'மருதாணி': 'அண்ணாத்த' மூன்றாவது பாடல் வெளியீடு