வெள்ளைத் தோலை மட்டுமே கொண்டாடிவந்த தமிழ் சினிமாவின் கதவுகளை திறந்துகொண்டு வந்தார் ரஜினிகாந்த் என்ற கறுப்பு நிற மனிதர். 1975ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற காட்சி அது, அன்று ரஜினி திறந்த கதவுகளை இன்றுவரை எவராலும் மூட முடியவில்லை. ரஜினி இந்திய சினிமாவின் பெருமையாக மாறிப்போனது அதற்கு முக்கிய காரணமாகும்.
பெங்களூரு பேருந்தில் நடத்துநராக காலத்தைக் கழித்திருக்க வேண்டிய ரஜினியின் வாழ்க்கையை மாற்றியது இயக்குநர் சிகரம் பாலசந்தரின் சந்திப்பு. ’அபூர்வ ராகங்கள்’ படத்தில் ரஜினியை பாலசந்தர் அறிமுகப்படுத்தினார். 1978ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் உருவான ‘முள்ளும் மலரும்’ படத்தை பார்த்த பாலசந்தர், உன்னை அறிமுகப்படுத்தியதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்றார். 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் ரஜினியை வைத்து மீண்டும் படம் இயக்குவீர்களா என பாலசந்தரிடம் கேட்டதற்கு, அவன் நான் தொடமுடியாத தூரத்துக்கு உயர்ந்துட்டான் என சொல்லியிருப்பார். இதுதான் ரஜினியின் வளர்ச்சி...
ஆரம்பகாலங்களில் மோசமான வில்லன், அடியாள், பெண் பித்தன் என இப்படியான கதாபாத்திரங்களே அதிகமாக தேடிவந்த ரஜினியின் திரைப்பயணத்தை மாற்றியது ‘புவனா ஒரு கேள்விக்குறி’, மென்மையான கதாபாத்திரங்களையும் நடிக்கக்கூடியவர் ரஜினிகாந்த் என்ற பிம்பத்தைக் கொடுத்தது இந்த படம்தான்... ஆனால் அதன்பிறகும் சில நெகட்டிவ் கதாபாத்திரங்கள் ரஜினியை தேடிவந்தன, அதையும் மறுக்காமல் நடித்தார்.
திரைக்கதாசிரியர் கலைஞானம் பணிபுரிந்த படம் ஒன்றில் ரஜினி கார் டிரைவர் வேடத்தில் நடித்துள்ளார், காரை ஸ்டார்ட் பண்ண சொன்னபோது ஸ்டைலாக ரஜினி சாவியை தூக்கிப்போட்டு பிடித்து ஸ்டார்ட் செய்தது கலைஞானத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ரஜினியின் உடல்மொழியால் ஈர்க்கப்பட்ட கலைஞானம், நான் படம் பண்ணினால் நீதான் கதாநாயகன் வேடத்தில் நடிக்கனும் என கூறியிருக்கிறார். கலைஞானம் தயாரிப்பில் உருவான ‘பைரவி’, ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. மதுரையில் திரைப்பட விநியோகஸ்தராக இருந்த கலைப்புலி எஸ் தாணு, போஸ்டர்களில் சூப்பர் ஸ்டார் என பெயரை அச்சிட்டு வெளியிட்டார். அப்போது எம்ஜிஆர், சிவாஜி உச்சத்தில் இருந்த நேரம், இந்த போஸ்டரால் சர்ச்சை எழும் என அதனை ரஜினி அப்போது நீக்க சொல்லியிருக்கிறார். ஆனால் அந்தப் பெயரை ரஜினியை விடவில்லை, மக்கள் மனதில் சூப்பர் ஸ்டாராகிவிட்டார் ரஜினி. ‘பைரவி’ படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரஜினியை மக்கள் தூக்கி கொண்டாடியிருக்கிறார்கள்.