தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய் ஆண்டனி - தமிழ் சினிமாவின் நினைத்தாலே இனிப்பவன் - VIJAY ANTONY MOVIES

வெடி திரைப்படத்தில் இச்சு இச்சு இச்சு கொடு என கவிஞர் வாலி உற்சாகத்தை ஆரம்பித்துவைக்க ரைட்டா ரைட்டே என்ற இடத்தில் அந்த உற்சாகத்தை நம்மிடம் கடத்தியிருப்பார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி, விஜய் ஆண்டனி பிறந்தநாள், விஜய் ஆண்டனி பாடல்கள், விஜய் ஆண்டனி படங்கள்
HAPPY BIRTHDAY VIJAY ANTONY

By

Published : Jul 24, 2021, 4:00 PM IST

தமிழர்களின் திரையிசையில் இளையராஜா, ரஹ்மான் ஒரு பாதையை போட்டுவைக்க, இசை ஆர்வத்தில் இசையமைப்பாளரானவர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி.

சின்னத்திரை டூ வெள்ளித்திரை

நாக்க முக்கா மூலம் உலகமெங்கும் ஒலித்த விஜய் ஆண்டனியின் இசையானது, வெள்ளித்திரைக்கு முன்பே சின்னத்திரையில் ஆரம்பமாகியுள்ளது. சின்ன பாப்பா பெரிய பாப்பா, கனா காணும் காலங்கள், காதலிக்க நேரமில்லை பல வெற்றிபெற்ற சின்னத்திரை சீரியல்களின் பாடல்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.

வெள்ளித்திரையில் அவர் அறிமுகமானது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'சுக்ரன்' திரைப்படத்தின் மூலம். அந்தப் படத்தில் விஜய்யும் நடித்திருப்பார். ஆனாலும், அந்தப் படத்திற்கு ப்ளஸ் விஜய் ஆண்டனியின் பாடல்கள்.

நெஞ்சாங்கூட்டில் நின்றவர்

சாத்திக்கடி, போத்திக்கடி, சப்போஸ் உன்னை காதலித்தால் என ஹிட் அடித்து கொண்டிருக்க, அடுத்து ஜீவா நடித்த 'டிஷ்யூம்' படத்தில் பாடலுடன் சேர்த்து பின்னணி இசையையும் அமைத்தார் ஆண்டனி.

டைலாமோ டைலாமோ, கிட்ட நெருங்கிவாடி என்று வெரைட்டியை வழங்கியவர், நெஞ்சாங்கூட்டில், பூமிக்கு வெளிச்சமெல்லாம் என்று மெலடிகளையும் மிதக்கவிட்டு கோலிவுட்டில் தனக்கான முத்திரையை பெற்றுக்கொண்டார்.

ஐந்து சுந்தரிகளும், சுடிதார்களும்

எல்லா இசையமைப்பாளர்களுக்கும் ஆல்பம் ஹிட் என்று குறைந்தபட்சம் ஒரு படமாவது இருக்கும். அப்படி விஜய் ஆண்டனிக்கு, காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், வேலாயுதம், உத்தமபுத்திரன் என பல படங்கள் இருந்தாலும், குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம், நான் அவன் இல்லை.

ஜீவன், சினேகா, நமீதா, மாளவிகா, ஜோதிர்மயி, கீர்த்தி சாவ்லா ஆகியோர் நடித்து வெளிவந்த இப்படத்தில், நாயகிகள் ஐவருக்கும் தன்னுடைய காதலை நாயகன் வெளிப்படுத்தும் விதமாக தலா ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும்.

இதன் அத்தனை பாடல்களிலும் காமமாக, காதலாக, கொண்டாட்டமாக அதகளம் செய்திருப்பார் விஜய் ஆண்டனி.

ஈகோ இல்லாதவர்

இசையமைப்பாளர் ஒரு படத்துக்கு அனைத்து பாடல்களையும் தானே இசையமைக்க வேண்டுமென்றுதான் நினைப்பார். அதுதான் படைப்பாளிகளின் இயல்பு. ஆனால் இரண்டு இசையமைப்பாளர்கள் இணைந்து ஒரு படத்துக்கு இசையமைப்பது கோலிவுட்டில் அரிதிலும் அரிது.

அந்த அரிதுகளில் விஜய் ஆண்டனியும் ஒருவர். அங்காடித் தெருவில் அவர் இசையமைத்த இரண்டு பாடல்களும் இரண்டு ரகத்தில் ஆனவை. குறிப்பாக அவள் அப்படி ஒன்றும் அழகில்லை.எழுதி இசையமைக்கப்பட்டஇந்தப் பாடலில் நா. முத்துக்குமார் புதுமையை புகுத்த அந்தப் புதுமையை தனது மெட்டால் மேலும் அழகாக்கியிருப்பார் விஜய் ஆண்டனி.

கேளு... மவனே கேளு...

குத்து பாடலோ, காதல் பாடலோ விஜய் ஆண்டனியின் எனர்ஜி எந்த இடத்திலும் சோடை போகாதது. சாத்திக்கடி பாடலில் தொடங்கிய அவரது பாடும் பயணம், நாக்க முக்காவில் உச்சம் பெற்று, நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமாவரை நீண்டிருக்கிறது.

விஷால் நடித்த வெடி திரைப்படத்தில் இச்சு இச்சு இச்சு கொடுஎன கவிஞர் வாலி உற்சாகத்தை ஆரம்பித்துவைக்க ரைட்டா ரைட்டே என்ற இடத்தில் அந்த உற்சாகத்தை நம்மிடம் கடத்தியிருப்பார் விஜய் ஆண்டனி.

அர்ச்சனைகளும் ஆண்டனியும்

அதிகமான ஆங்கில வார்த்தை கலப்பு, புரியாத வார்த்தைகளின் பயன்பாடு, பிறநாட்டு இசைகளை களவாடுதல் என அடுக்கடுக்காக அர்ச்சனைகள் இவர் மீது வைக்கப்பட்டாலும், இவரது இசையை அது துளிகூட அசைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.

இன்றுவரை, கல்லூரி மாணவர்களின் அறை கொண்டாட்டத்திலும், ஒரு தலைமுறையின் விருப்ப பட்டியலிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.

நான், சலீம், பிச்சைக்காரன், கொலைக்காரன் என நடிப்பிலும் ஹிட் அடித்திருக்கும் விஜய் ஆண்டனி, தற்போது நான்கு படங்களை கையில் வைத்திருக்கும் முழுநேர நடிகராகியிருப்பது வேறு கதை.

இரண்டு ஆண்டுகளுக்கு தயாரிப்புக்கும், இசையமைப்பிற்கும் இடைவெளி விடுவதாகவும், நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாகவும் முன் ஒருமுறை கூறியிருந்தார். அதேசமயம் அவர் மீண்டும் இசையமைக்க வர வேண்டுமெனவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால், தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை இசையில் செய்தது போல் விஜய் ஆண்டனி தனது வாழ்க்கையிலும் செய்பவர். முக்கியமாக, வாழ்வில் எந்த இடத்திலும் தேங்காமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பவர். அப்படி இருப்பதால்தான் அவரால் நினைத்தாலே இசைக்க முடிகிறது, இனிக்க முடிகிறது. பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய் ஆண்டனி.

இதையும் படிங்க: முடிவுக்கு வந்த 'பிச்சைக்காரன் 2': இயக்குநராகும் விஜய் ஆண்டனி

ABOUT THE AUTHOR

...view details