சென்னை: சென்சாரில் கட் செய்யப்பட்ட காட்சியை ஸ்னீப் பீக் விடியோவாக 'ஜிப்ஸி' படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பத்திரிகையாளர், இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'ஜிப்ஸி', மார்ச் 6ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதையடுத்து இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் விடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'காட்சியின் வசனங்கள் சர்ச்சைக்குரியவை எனக் கூறி சென்சார் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட காட்சியை வெளியிட்டிருந்தனர். அத்துடன் இந்தக் காட்சி படத்தில் இடம்பெறாது' என்று விடியோ தொடங்கும் முன் குறிப்பிட்டுள்ளனர்.
படத்தின் கதைப்படி நாடோடி வாழ்க்கை வாழும் ஜீவா மற்றும் அவரைப் போல் வாழ்க்கை வாழ்ந்து வரும் சிலரை காவல்நிலையத்தில் வைத்து விசாரிப்பது போன்று இந்தக் காட்சி அமைந்துள்ளது.
தற்கால நிகழ்வுகளை அரசியலோடு கலந்து அரசு அமைப்புகளை பகடி செய்யும் விதமாக அமைந்திருந்த இக்காட்சியின் இடம்பிடித்த வசனங்கள் மிகவும் கூர்மையாக அமைந்துள்ளன.
ஆதார் அட்டை இல்லைாததை ஏடிஎம் கார்டு மூலம் சரி செய்யும் முறை, காவல் துறை, நீதித்துறையின் செயல்பாடுகளை விமர்சிக்கும் விதமாக இந்த இரண்டு நிமிட காட்சியில் வசனங்கள் இடம்பிடித்துள்ளன.
ஏற்கனவே ராஜூமுருகன் தனது முந்தைய படமான 'ஜோக்கர்'-இல் சட்டவிரோத மணல் கொள்ளை, திறந்தி கிடக்கும் போர்வெல் குளிகளை மூடுதல் உள்ளிட்ட பல விஷயங்களை கையில் எடுத்திருந்தார். இதையடுத்து தற்போது 'ஜிப்ஸி' படத்தில் தேசிய ரீதியிலான அரசியில் விவகாரங்களை முன்னெடுத்திருப்பதாகத் தெரிகிறது.