தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மகத்தான மனிதர்களை அடையாளம் காட்டும் ஜி.வி.பிரகாஷ்! - சமூக சேவை

சமூகத்தில் உள்ள மகத்தான மாமனிதர்களை அடையாளம் காட்டும் முயற்சியில் ஜி.வி.பிரகாஷ் ஈடுபட்டுள்ளார்.

Gv prakash kumar

By

Published : May 27, 2019, 5:09 PM IST

இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது இசையமைத்துக் கொண்டு பல படங்களில் நடித்தும் வருகிறார். இவரது நடிப்பில் சசி இயக்கத்தில் உருவான படம் ”சிவப்பு மஞ்சள் பச்சை” விரைவில் வெளிவரவுள்ளது. மேலும் இயக்குனர் எழில் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். சூர்யா, தனுஷ் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவ்வளவு வேலைகளின் நடுவே சமூகம் சார்ந்த பல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இசை, நடிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்திய ஜி.வி.பிரகாஷ் குமார் சமூக பணிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார். என்ன காரணம் என்று கேட்டால், “நானும் சமூகத்தில் ஒரு மனிதன்தான்” என்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் 1

இதுகுறித்து அவர் கூறியதாவது,

சினிமா துறை என்பது மற்ற தொழில் போல ஒரு தொழில் அவ்வளவுதான். நாங்களும் சாதாரண மனிதர்களை போன்றவர்கள்தான். பயணம் எங்கு தொடங்கிறதோ, புதிய கனவுகள் அங்கு மலரும். அந்த பயணத்தின் தொடர்ச்சியாகத்தான் இசை. இசைக்கு பின்பு நடிப்பு. தற்போது சமூகப் பணி. நான் இசை அமைத்த போதிலும், நடித்த போதிலும் கிடைத்த கைதட்டல்களில் கிடைக்காத சந்தோஷம் சமூக சார்ந்த வேலைகள் செய்யும் போது கிடைக்கிறது.

என் சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஒரு முடிவு வேண்டும். அதற்காக என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். அது என் கடமையும் கூட. என் பயணத்தின் அனுபங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை. தமிழகத்தில் இன்னும் மழை பெய்து கொண்டு இருக்கிறது என்றால் நான் சந்தித்த, சந்திக்காத மாமனிதர்களால்தான் என்று சொன்னால் மிகையாகாது.

ஜி.வி.பிரகாஷ் 2

என் சமூகத்தில் இன்னும் அடிப்படை தேவைகளில் ஒன்றான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கம். அதில் குறிப்பாக ஒரு பெண்ணிற்கு கிடைக்கும் கல்வி, அவள் குடும்பத்திற்கு கிடைக்கும் கல்வி ஆகும்.

நான் பார்த்த சமூக பணி செய்யும் மனிதர்கள் மிகவும் சாதாரணமாக மிகப் பெரிய சமூக பிரச்னைகளை எதிர்க்கொண்டு அதற்கான தீர்வுகளை கண்டுள்ளார்கள். அதற்காக உலக அளவில் பெரிய விருதுகள் கூட பெற்றுக் கொண்டு இன்னும் மக்களுடன் மக்களாக சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இவை அனைத்தையும் செய்துவிட்டு மிகவும் தன்னடக்கத்துடன் இருக்கிறார்கள்.

நான் சினிமாவில் இருக்கிறேன் என்பதற்காக என் முகம் வெளியே தெரிகிறது. அதுவும் ஒரு வகை நன்மைதான் என்று நான் எண்ணுகிறேன். காரணம் என் மூலம் இந்த மாமனிதர்களை வெளியே கொண்டு வந்து மக்களுக்கு காட்ட விரும்புகிறேன்.

ஜி.வி.பிரகாஷ் 3

வெளிச்சத்துக்கு வராமல் அதே நேரத்தில் சிறப்பாக சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் செயற்பாட்டாளர்களை நானே நேரடியாக அவர்கள் இடத்துக்கு சென்று பேட்டி எடுத்து வெளி உலகத்துக்கு காட்ட உள்ளேன். 'மகத்தான மாமனிதர்கள்' என்ற பெயரில் என்னுடைய யூடியூப் சேனலில் இது ஒளிபரப்பாகும். சுதந்திரமாக இந்த நிகழ்ச்சி அமையவேண்டும் என்பதற்காக லாப நோக்கு துளிகூட இல்லாமல் யூடியூபில் வெளியிடுகிறேன்.

சமூக பணி பல துறைகளில் இருக்கிறது, என்னால் எல்லா துறைகளிலும் சென்று உதவ முடியாது. அதனால் பல துறைகளில் சிறப்பாக செயல்படும் மனிதர்களுடன் சேர்ந்து பயணிக்க முடிவு செய்தேன். அதுபோல நான் சமூகத்தில் சந்திக்கும் மகத்தான மனிதர்களை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகதான “மகத்தான மாமனிதர்கள்” என்ற தொகுப்பு, என்று மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் கூறுகிறார்.

ABOUT THE AUTHOR

...view details