'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்திற்கு பிறகு பத்து ஆண்டுகள் கழித்து கார்த்திக் - ஜெஸ்ஸியின் உறவினை குறும்படம் வாயிலாக வெளியிட்டிருக்கிறார், இயக்குநர் கௌதம் மேனன். ஊரடங்கு காலத்தில் தனது 'ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' யூடியூப் சேனலில் 'கார்த்திக் டயல் செய்த எண்' என்கிற குறும்படத்தை வெளியிட்டார், கௌதம் மேனன்.
வெளியான உடனேயே பல பார்வையாளர்களைப் பெற்றது, இக்குறும்படம். அதோடு மட்டுமல்லாமல், சிம்பு ரசிகர்கள் குறும்படத்தை கொண்டாடியும் பேசியும் வருகின்றனர். 12 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் இக்குறும்படத்தில் கதை எழுத முடியாமல் தவிக்கும் கார்த்திக்கிற்கு ஜெஸ்ஸி உத்வேகம் அளிப்பதைப்போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஜெஸ்ஸியிடம் தொலைபேசியில் பேசிய பின்னர், புத்துணர்ச்சி பெற்ற கார்த்திக், கதை எழுதுவதுபோல் குறும்படம் இருக்கும்.
கதையை எழுதும் காட்சியில் 'கமல் அண்ட் காதம்பரி' என்ற வாக்கியம் அமைந்திருக்கும். சூர்யாவுக்காக யோசித்து வைத்திருக்கும் கதை 'கமல் அண்ட் காதம்பரி' என கௌதம் மேனன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அது இசைப் பிரியர்கள் இருவரின் காதல் கதை எனவும் கௌதம் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... இவன் காதலின் ரசிகன் - HBD Gautham Vasudev Menon
'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்தின் இறுதிக்காட்சியில் சில வரிகள் இடம்பெற்றிருக்கும். '33 வயதான ஆள் நான். மனதில் வலியுடன் அழுதுகொண்டிருக்கிறேன், என்ன செய்ய... சில மனிதர்கள், சில பெண்கள்... அவர்கள் உங்களிடம் இருந்து போகமாட்டார்கள், உங்கள் உயிரிலிருந்தும்' என்ற கவிதைத்துவமான அந்த வரிகளில், தன் அடுத்தப் படத்தின் கதையை கௌதம் குறிப்பால் உணர்த்துகிறார் எனச்சிலரும், 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின், ஹின்ட்டாக அந்த வரிகள் இருக்கலாம் எனச் சிலரும் பேசி வருகின்றனர்.