'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சசி இயக்கியுள்ள திரைப்படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் நாயகர்களாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ், தீபா இராமானுஜம் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
போக்குவரத்து காவலராக சித்தார்த்தும், பைக் ரேஸராக ஜி.வி. பிரகாஷும் நடித்துள்ளனர். அதிரடி சண்டைக் காட்சிகள் அட்டகாசமான பைக் சேசிங் காட்சிகளுடன் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஜிவி பிரகாஷ் ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
’சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் கதையை எப்படி தேர்வு செய்தீர்கள்
இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடனேயே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இது மல்டி ஹீரோ கதை என்று சசி என்னிடம் கூறினார். கதை கூறுங்கள் என்னுடைய கதாபாத்திரம் நன்றாக இருந்தால் நடிக்கிறேன் என்று கூறினேன்.
படத்தின் குழந்தைப்பருவ கதையை கேட்கும் பொழுது பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே போன்ற படம்போல் கிளாசிக்காக இருந்தது. இந்த உணர்வு ஆடியன்ஸுக்கு தற்பொழுது உள்ளது.
ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் இந்தக் கதையில் ஒன்றி போவார்கள். உங்கள் அக்காவிற்கும் உங்களுக்கும், உங்கள் தங்கைக்கும் உங்களுக்கும், உங்களுக்கும் உங்கள் மாமாவுக்கும் இடையே நடக்கும் கதையாக இது இருக்கும். இது குடும்பமாக பார்க்க வேண்டிய ஒரு படம்.