சென்னை: டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டரில் கூறுகையில், “பொதுமக்களுக்கு போராட்டம் செய்ய உரிமை உள்ளது. அவர்களின் நலன்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். விவசாயிகளை புதிய சட்டத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம்.
பொதுமக்கள் அவர்களின் உரிமைக்காக போராடுகிறார்கள். இது ஜனநாயகமானது. அவர்கள் "ஏர்முனை கடவுள்" என்று அழைத்தால் மட்டுமே நம்மை படைத்தவனும் மகிழ்வான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து கடந்த மூன்று மாதத்துக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு தொடங்கி பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஜி.வி. பிரகாஷ், தற்போது விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இவரைப் போல் இயக்குநர் பா. ரஞ்சித்தும் தனது ட்விட்டரில், "கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பக்கம் நாங்கள் நிற்கிறோம். இவர்களின் போராட்டம் மற்றும் ஆதரவாளிப்பவர்கள் பற்றி கேள்வி எழுப்புகிறவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் குறைந்தபட்ச ஆதார விலையை நம்பியே உள்ளது என்பதை உணர வேண்டும்.
பொறுப்புள்ள குடிமக்களாகிய நாம், விவசாயிகளின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்புகிறவர்கள், விமர்சிப்பவர்கள் யார் என்பதை சிந்திக்க வேண்டும்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பவர்கள் மீது விமர்சனங்கள் முன்வைப்பதை பார்க்க முடிகிறது. இது விவசாயிகளின் வாழ்வாதாரம் மீது அவர்கள் வைத்திருக்கும் நிலைப்பாட்டை காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பா. இரஞ்சித்தின் தயாரிப்பில் பெருமாள் முருகனின் கதை திரைப்படமாகிறது!