சென்னை: வரி கட்டும் நடிகர்கள், மார்க்கெட் இல்லாத சமயத்தில் அரசு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கலாம் என்று புதுவித யோசனையை முன்வைத்தார் இயக்குநர் கே. பாக்யராஜ்.
இதுகுறித்து அவர் மரிஜூவானா இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில், “45 வருடத்துக்கு முன்னாள் நண்பர்களுடன் கேரம் ஆடும்போது மகிழ்ச்சியாக கஞ்சா இழுத்துக்கொண்டே ஆடியிருக்கிறேன். கஞ்சா உச்சத்துக்கு செல்லும்போது பல விஷயங்கள் நிகழும். கஞ்சா மயக்கத்தின் உச்சத்தில் இருந்தபோதுதான் வாழ்க்கைய சாதிக்க வேண்டும் எனத் தோன்றியது. அப்போதுதான் சென்னைக்கு வந்து சினிமாவில் சேர்ந்து இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்.
பாடல் எழுதும்போது கண்ணதாசன் போதைப் பொருள் உபயோகிப்பாராம். ஜெயகாந்தன் போதைப் பொருளை தேவ மூலிகை என்று சொல்வார். கூட்டி கழித்து பார்த்தால் கஞ்சா எனர்ஜியையும், பாதிப்பையும் பலருக்கு தருகிறது.
இங்கு பேசியவர்கள் பலர் வரி விதிப்புகளை பற்றி கூறினர். வருமான வரி என்று சொல்லும்போது எனக்கு நினைக்கு வருவது, எனது தாவணி கனவுகள் படம் ரிலீஸ் சமயத்தில், ஒரு கோடிக்கு மேல் வியாபாரம் ஆகியிருப்பதாக யாரோ சிலரால் வருமான வரித்துறையினருக்கு தகவல் சொல்லப்பட்டது.
நான் எனது வீட்டில் குளித்துவிட்டு வெளியே வந்தபோது திடீரென் வருமான வரித்துறை பெண் அலுவலர் ஒருவர் எனது வீட்டுக்கு சோதனை செய்ய வந்திருப்பதாக கூறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். பின்னர் ஆடை மாற்றிவிட்டு வந்தபோது, எங்கும் செல்லக்கூடாது என சோதனைக்கு வந்தவர்கள் உத்தரவிட்டனர். அப்போது படம் சென்சார் சான்றிதழ் வாங்கி ரிலீஸுக்கு திரையரங்குகளுக்கு அனுப்பும் வேலை இருக்கிறது. அதைச் செய்யவில்லை என்றால் பெரிய பிரச்னையை சந்திக்க நேரிடும் என்று அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.
இதைத்தொடர்ந்து என்னுடன் ஒரு அதிகாரியை அனுப்பி வைத்து, அவர் யார் என்பதை சொல்லக்கூடாது என்று தெரிவித்தனர். பின் நான் சென்சார் அதிகாரியை பார்த்தபோது, என்னுடம் வந்த அதிகாரி பற்றி அவர் கேட்டார். அப்போது நான் யாரென்று தெரியாது என்றேன்.
இதனைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரியை திட்டியபோது, வேறு வழி இல்லாமல் விஷயத்தை சொன்னேன். வருமான வரித்துறை சோதனையின்போது இதுபோன்று இடைஞ்சல்களை சந்தித்தேன்.
சினிமா துறையில் உள்ள நடிகர் மற்றும் பிரபலங்களுக்கு நல்ல நிலையில் இருக்கும்போது அதிக அளவில் அரசாங்கம் வரி வசூலிக்கிறது. நடிகர்களுக்கு மா்க்கெட் போகும்போது யாரும் நஷ்ட ஈடு தருவதில்லை. வரி கட்டும் நடிகர்களுக்கு அரசு ஓய்வூதியம் கொடுக்க முன் வந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.
இதையும் படிங்க: டிக்கெட் விலையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு நடிகர்களுக்கு உண்டு - இயக்குநர் பாக்யராஜ்