தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சிம்பன்சிக்காக குழந்தைகளுடன் பார்க்கலாம்' - கொரில்லா திரை விமர்சனம்

கொரில்லா படம் லாஜிக் கிலோ என்ன விலை எனக் கேட்கத் தோன்றினாலும், சிம்பன்சிக்காக குழந்தைகள் ரசிப்பார்கள் என்பதால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு படத்திற்குச் செல்லலாம்.

கொரில்லா

By

Published : Jul 14, 2019, 6:51 PM IST

ஜீவா நடித்த கொரில்லா படத்தை ஆல் இன் பிக்ச்சர்ஸ் தயாரிதுள்ளது. இயக்குநர் டான் சாண்டி படத்தை இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

ஜீவா போலி மருத்துவர் கதாபாத்திரத்தில் வருகிறார். ஐடி வேலை பறி போன சதீஷ் (சதீஷ்), நடிப்பு ஆசையில் சுற்றும் வெங்கட் ( விவேக் பிரசன்னா) இந்த மூவரும் ஒரே அறையில் தங்கி இருக்கிறார்கள். கடன் பிரச்னையால் தற்கொலைக்கு முயலும் விவசாயி சாதீக்கை(மதன் குமார்) நான்காவதாக இணைத்துக் கொள்கிறார்கள். நால்வருக்கும் பணம் தேவை என்பதால் வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள். எதிர்பாராத விதமாகச் சிறு வயதிலேயே ஜீவாவால் காப்பாற்றப்பட்டு இவர்களுடன் இருக்கும் சிம்பன்சி காங். இந்த ஐவரும் சேர்ந்து வங்கியில் கொள்ளை அடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஜீவா-ஷாலினி பாண்டே

லோக்கல் பாய் கதாபாத்திரம் என்றாலே ஒரு கை பார்க்கும் ஜீவா இந்தப் படத்திலும் தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாகச் செய்துள்ளார். ஷாலினி பாண்டேயின் நடிப்பு இவர் அர்ஜுன் ரெட்டி படத்தின் நாயகியா என சந்தேகம் வரும் அளவுக்கு உள்ளது. அவருடைய நடிப்பு ஒரு சில ரியாக்‌ஷன்கள் மட்டுமே வெளிப்படுகிறது.

சதீஷ், விவேக் பிரசன்னா காம்போவின் டைமிங் நகைச்சுவைகள் ஈர்க்கின்றன. எனினும் யோகிபாபு தான் திரையில் அதிகம் கவனம் பெறுகிறார். இந்தப் படத்தின் கதை ஓட்டத்திற்குச் சிம்பன்சியின் முக்கிய பங்கு என்று எதுவுமில்லை. சிம்பன்சி இல்லாமல் இருந்தாலும் திரைக்கதையில் எந்த வித மாற்றமும் ஏற்படாது.

ஜீவா-ஷாலினி பாண்டே கொரில்லாவுடன்

எதற்காக இந்த சிம்பன்சி இந்த படத்தில் உள்ளது என்பதே இயக்குநரிடமே கேட்க வேண்டும். ஒரு சிம்பன்சியை எப்படி சான்றிதழ் இல்லாமல் வீட்டில் வளர்க்க முடியும். படமும் சுவாரசியம் இல்லாமல் நகர்வதால் ஒரு கட்டத்தில் கொட்டாவியை வரவழைக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று விவசாயக் கடன் போராட்டத்தையும் மக்கள் முன்னெடுக்க வேண்டும் கூறுவதில் இயக்குநர் கைத்தட்டல் பெறுகிறார். மற்ற படி சொல்லிக்கொள்ளும் அளவிற்குப் படத்தில் எதுவுமில்லை என்பதே உண்மை.

குருதேவ் ஒளிப்பதிவு, சாம் சி.எஸ் இசை இரண்டுமே சுமாராகத்தான் வந்துள்ளன. பாடல்கள் கூட ரசிக்கும் படியாய் இல்லை. சிம்பன்சியைக் கொண்டு சொல்லும் கதை எதோ புதுமையாக எடுத்திருக்கிறார்கள் என நினைத்தால் அப்படியெல்லாம் இல்லை எனச் சொல்லி சினிமாவுக்காக பேசப்படும் கமர்சியல் விவசாய பிரச்சினையைப் பேசுகிறது. விவசாயப் போராட்டம் விவசாயிகளுக்குக் கைகொடுத்தது இல்லையோ..? ஆனால் கோடம்பாக்கத்து சினிமாக்காரர்களுக்கு பணம் கொட்டும் மரமாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

யோகி பாபு மற்றும் கொரில்லா

கொரில்லா படம் லாஜிக் கிலோ என்ன விலை எனக் கேட்கத் தோன்றினாலும், சிம்பன்சிக்காகக் குழந்தைகள் ரசிப்பார்கள் என்பதால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு படத்திற்குச் செல்லலாம்.

கொரில்லா... மனதை அவ்வளவாக கொள்ளை கொள்ளவில்லை.

ABOUT THE AUTHOR

...view details