கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவும் காலகட்டத்தில்தான் ஒருவருக்கொருவர் தரும் அன்பும், ஆதரவும் நமக்கு, நம் குடும்பத்தினருக்கு, சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணரத் தொடங்கியுள்ளோம். பலருடைய வாழ்க்கையில் இந்தக் கரோனா தீநுண்மி பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயங்களை மையப்படுத்தி இயக்குநர் கோகுல் புதிய நகைச்சுவைப் படம் ஒன்றை இயக்க உள்ளார். அந்தப் படத்துக்கு “கொரோனா குமார்” என்று பெயரிட்டுள்ளார்.
'ரெளத்திரம்', 'காஷ்மோரா', 'ஜுங்கா' ஆகிய படங்களை இயக்கிய இவர் தற்போது மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஹெலன்‘ தமிழ் ரீமேக்கை இயக்கிவருகிறார். கோகுலின் அடுத்தப் படமாக 'கொரோனா குமார்' திரைப்படம் உருவாகவுள்ளது.
'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்தில் 'குமுதா ஹேப்பி அண்ணாச்சி', 'மச்சி லவ் மேட்டர் பீல் ஆய்டாப்ள' போன்ற காமெடி வசனங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து தனக்கென தனி முத்திரை பதித்தார் இயக்குநர் கோகுல்.
அதே பாணியில் முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே பின்னணியாகக் கொண்டு 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்தில் உள்ள சில முக்கிய கதாபாத்திரங்களை வைத்து கரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாக உள்ளது.