சென்னை: கவர்ச்சி மட்டுமில்லாமல், ஹீரோயின், குணச்சித்தரம், காமெடி வேடங்களிலும் நடிப்பில் வெளுத்து வாங்கிய மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் 23வது இறந்த தினம் இன்று.
அடுத்தடுத்த நிமிடங்களில் வெவ்வேறு பிரேக்கிங் நியூஸ் என்று பரபரப்பாக வெளிவந்துகொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், கவர்ச்சி நடிகை சில்க் தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார் என்ற ஒற்றை செய்தி 1996இல் இதே நாளில் தமிழகம் மட்டுமின்றி, சில்க் காலூன்றி திறமையை வெளிக்காட்டிய அனைத்து மொழிகளைச் சேர்ந்த மாநிலங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காந்தக் கண்ணழகி சில்க் ஸ்மிதா சிலுக்கின் மரணம் இயற்கையாக இல்லாமல், தற்கொலையாக இருந்ததால் கடன், காதல்தோல்வி, மதுப்பழக்கம் என பல்வேறு விதமாக பேசப்பட்டன. சிலுக்கு என்ற சாராய கடையை நடத்தும் கேரக்டரில் தோன்றி நிரந்தரமாக சிலுக்காக மாறிய அவர், இறப்பதற்கு முன்பும் சுபாஷ் என்ற படத்தில் கவர்ச்சி ஆட்டத்தால் ரசிகர்கள் தன்னிடம் எதிர்பார்ப்பதை வெளிகாட்டி திருப்தியடையச் செய்த பின்னரே உலகை விட்டு பிரிந்துள்ளார்.
மூன்றாம் பிறை படத்தில் கமலுடன், சில்க் நடனம் ஹீரோக்களுக்கு பொருத்தமான நடிகையை தேர்வு செய்வதில் அல்லாடும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு மத்தியில், தன்னுடன் நடனம் ஆடுவதற்காக ஹீரோவை காக்க வைத்த பெருமையை சிலுக்கை தவிர வேறு யாரும் பெற்றதில்லை.
ஹீரோ, ஹீரோயின், இயக்குநர்கள் போன்றவர்களை கடந்து சிலுக்கு பாடல் உள்ளது, அவர் சில காட்சிகளில் வருகிறார் என்று கூறி படத்தின் வியாபாரத்தை எளிதாக முடித்து வைக்க காரணமாக இருந்திருக்கிறார். கவர்ச்சி நடிகை என்ற டேக்லைன் அவர் மீது மிக அழுத்தமாக இருந்த போதிலும், ஹீரோயினாக, குணச்சித்திர நடிகையாக அவர் நடிப்புத் திறமையை வெளிக்காட்டிய படங்கள் ஏராளம் இருப்பதால் அவரை அழகான ராட்சசி என்றே அழைக்கலாம்.
நீங்களும் ஹீரோதான் படத்தில் சில்க் 1990இல் வெளியான நீங்களும் ஹீரோதான் என்ற படத்தில் சிலுக்காகவே நடித்திருப்பார். அதில், ஷுட்டிங்குக்காக கிராமம் ஒன்றுக்கு வரும் சிலுக்கை அங்குள்ள 40 வயதை கடந்த இளைஞர்கள் சுற்றி மொய்த்துக் கொண்டிருப்பார்கள். காந்தக் கண்ணழகி என்று வர்ணிக்கப்படும் அவர் உடற்பயிற்சி செய்வது தொடங்கி எல்லா செயல்களிலும் பின்தொடர்வார்கள். ஆண்கள் மத்தியில் அவ்வளவு செல்வாக்கு பெற்ற அவரை, அந்த கிராமத்துப் பெண்கள் ஏளனமாக பார்ப்பதுடன், மரியாதை குறைவாகவும் பேசுவார்கள்.
பின்னர் ஒரு காட்சியில் உங்களைப் போல் நடிகையாக விரும்புவதாகக் கூறும் பெண் ஒருவரிடம், 'சினிமாவில் இருக்கும் நெளிவு சுளிவுகளை கடக்கவும் முடியாமல், உள்ளே வந்த பிறகு சினிமாவை விட்டு போகவும் முடியாமல் மரியாதை இழந்து, வெறும் பணத்தை மட்டும் சம்பாதிக்கும் நிலைமைதான் இருக்கிறது' என எதார்தத்தை கூறுவார். அந்த காட்சி அப்படியே சிலுக்கின் நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும்.
சில்க் காலத்தில் டிஸ்கோ சாந்தி, அனுராதா, குயிலி என அவருக்குப் போட்டியாக வலம் வந்தவர்களில் தனி ஒருவராக தன்னை நிலை நிறுத்திக்காட்டினார். அவர் இறப்புக்கு பின்னர் வருகை தந்த மும்தாஜ், அல்போன்சா, பாபிலோனா தொடங்கி தற்போதுள்ள சன்னி லியோன் வரை சிலுக் ஏற்படுத்திய தாக்கத்தை எதோ ஒரு கட்டத்தில் சிலுக் போன்று இல்லை என்று மனதுக்குள் ஏற்படுத்தும் உணர்வை விதைத்து விட்டிருக்கிறார்.
இன்றைய இணைய உலகில் கவர்ச்சி புகைப்படங்கள், விடியோக்கள் என மிகவும் எளிதாக பார்த்து ரசிக்கும் சூழிலில், சன்னி லியோன், மியா கஃலிபா என்ற தீவிரமாக தேடிப் பார்த்து ரசிக்கப்படுகிறார்கள். இந்த லிஸ்டில், மறந்து விட்ட நடிகையாக சில்க் இல்லாமல், அவரது கவர்ச்சி தரிசனத்தை கண்டு ரசிக்கும் கண்களும் இருக்கத்தான் செய்கின்றன.
சுண்டி இழுக்கும் பார்வையுடன் சில்க் குடும்ப கஷ்டத்தால் சினிமாவுக்குள் வந்து தனக்கென தனி ஸ்டைல், வசீகர கண்கள், கிறங்கடிக்கும் குரல், இவை எல்லாவற்றையும் மீறிய தனது உடலமைப்பு வார்த்து கொடுத்த கவர்ச்சியை தனிப் பெரும் உச்சத்தை தொட்டிருக்கிறார். இறுதியில் இப்போது வரை விடை தெரியாமல் யூகத்தை ஏற்படுத்தும் அவரது மரணம் இன்றும் மனதில் உலாவிக்கொண்டிருக்கிறது அந்த ஒரே பெயர் சில்க்.