ஒருவர் இறந்துவிட்டார் என்றால் அவரின் சிரிப்பு, அழுகை, நடை, நினைவு, பேச்சு, பழக்கவழக்கம் என அனைத்தையும் ஆண்டிற்கு ஒரு முறையாவது உறவினர்கள் நினைவுகொள்ள வேண்டும், என பெரும்பாலானவர்கள், தன் அந்திமக் காலத்தில் நினைத்திருப்பர்.
ஆனால் ஒரு கலைஞனோ, படைப்பாளியோ தான் மரணத்தைத் தழுவும் அன்றைய தினம் மட்டுமின்றி, தனது மரணத்திற்குப்பின்னும் எப்படி நினைவுகூரப்பட வேண்டும், எவ்வாறு அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பதை எண்ணி எண்ணி பணியாற்றியிருப்பர். அவ்வாறு தான் நினைத்தபடி நினைவுகூரப்பட வேண்டும் என்பதே கலைஞனின் இறுதிமூச்சிற்கான ஆசையாகவும் இருக்கும்.
தற்போது இந்த கரோனா பெருந்தொற்று உலகத்தின் இயங்கியல் முறையினையே உருமாற்றிவிட்டது. கரோனாவால் இறந்தவர்களின் முகத்தைக் கூட உறவினர்களால் பார்க்க முடியாத சோகம் உலகெங்கும் அரங்கேறி வருகிறது. இவ்வேளையில் தான் கரோனா, பல உன்னத கலைஞர்களையும் காவு வாங்கியிருக்கிறது.
இந்த கரோனா பெருந்தொற்றில் போராடி தமிழ்த் திரையுலகில் நடிகர் மாறன் இன்று (மே 12) பலியாகியுள்ளார்.
இது நட்சத்திர நடிகர்களின் மரணம், இது பெரிதும் பரிட்சயம் இல்லாத நடிகர்களின் மரணம், என்ற எந்தவொரு பாகுபாடும் கலைஞர்களில் இல்லை. கலைஞன் என்ற பார்வையில் இங்கு அனைவரும் சமம்.
அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தும் நடிகர் மாறன் "குத்தடி குத்தடி சைலக்கா, குனிஞ்சு குத்தடி சைலக்கா", "மதுரை மல்லி மணக்குது சொல்லி" என ’கில்லி’ திரைப்படத்தில் கபடிக் குழுவில் கானா பாடி வருபவர்தான், நடிகர் மாறன். அதே 'கில்லி’ திரைப்படத்தில் வித்யாசாகரின் இசையில் "கபடி கபடி" பாடலையும் பாடி, ரசிகர்களிடம் முணுமுணுக்க வைத்தவரும் இவரே. 'தலைநகரம்' திரைப்படத்தில் வடிவேலு, "அடிக்கிறவன்லான் ரவுடி இல்லடா, எவ்வுளவு பேரு அடிச்சாலும் அசராம அடி வாங்குறவன் தான்டா ரவுடி" என மறைந்த நடிகர் மாறனிடம்தான் கூறுவார்.
கில்லி கபடிக் குழுவில் நடிகர் மாறன் நடிகர் ஜீவா நடித்த 'டிஷ்யூம்' திரைப்படத்தில் "நான் ஹூரோவுக்கு டூப் போடுறவன்.. நீ கொழந்தைகளுக்கு டூப் போடுறவன்.. எனக்கே சவாலா" என வீராப்பாக கூறிவிட்டு, 'கின்னஸ்’ புகழ் பக்ருவின் கால்களுக்கு இடையில் புகுந்து போகும் சவாலில் தோற்கும் காட்சி இன்று வரையிலும் யார் நினைத்தாலும் சிரிப்பை வரவைக்கும்.
நேற்று மரணமடைந்த நெல்லை சிவாவுடன் 'தலைநகரம்' படத்தில் நடிகர் மாறன் இதுமட்டும்தான் இவரின் அடையாளமா என்றால், இல்லை. அவர் ஒரு குத்துச்சண்டை வீரர், விளையாட்டு வீரர், கானா பாடகர், ஓவியர் என ஒரு கைதேர்ந்த கலைஞனாகவே வலம் வந்திருக்கிறார், மாறன்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழ்மையான பின்புலத்திலிருந்து வாழ்க்கையில் கைக்கு எட்டும் அத்தனை கண்ணிகளையும் பிடித்து உயிர்ப் பிழைத்திருந்த சாமானியனாக இருந்திருக்கிறார், மாறன்.
நீண்டநாள் கழித்து 'சார்பேட்டா' திரைப்படத்தில் பெயர் சொல்லும் கதாபாத்திரம் கிடைத்திருப்பதாக நண்பர்களிடம் கூறி மகிழ்ந்துள்ளார், நடிகர் மாறன். ஒரு கலைஞனின் ஒட்டுமொத்த உழைப்பும், வாழ்வும் அந்தந்த நேரத்தின் அங்கீகாரத்திற்குத் தானே.
இயக்குநர் அதியன் ஆதிரை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த மாறன் பாடல் பாடும் காணொலி இயக்குநர் பா. ரஞ்சித் அவருக்கான அஞ்சலியில், "கடக்க முடியாத துயரம்.. எப்போதும் கட்டுக்கடங்காத அன்பை பொழியும் மாறன் அண்ணாவே, உன் முகத்தைக் கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள்-ணா!!.. என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை!! நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள்.."என உருக்கமாக பேசியிருந்தார். அவ்வார்த்தைகள் அனைவருடைய மனதிலும் நின்று நிழலாடின, நடிகர் மாறனின் நினைவுகளை சுமந்தபடி.
ஆம், கலைஞனின் மரணம் என்பது சாதாரணமாக கடக்கக் கூடியதா என்ன...?
இதையும் படிங்க: நெல்லை சிவா: ஊரின் மொழியை வாய்மொழியாக கொண்டவர்