1960-களில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் புரட்சிகர மாணவத் தலைவராகத் திகழ்ந்தவர் ஜார்ஜ் ரெட்டி. மார்க்சிஸ கம்யூனிச சிந்தனைகளை மாணவர்களிடம் பெரிதும் கொண்டு சேர்த்த ஜார்ஜ் ரெட்டி அதிகாரவர்க்க கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
ஜார்ஜ் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘அலஜாடி’ என்ற திரைப்படம் 1989ஆம் ஆண்டு வெளியானது. இன்றைய தலைமுறையினர் ஜார்ஜ் ரெட்டி போன்ற தலைவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ‘ஜார்ஜ் ரெட்டி’ என்ற பெயரில் அவரது வாழ்க்கை வரலாற்றுக் கதை மீண்டும் படமாக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய ஜார்ஜ் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று கதையை ஜீவன் ரெட்டி இயக்கியுள்ளார். ’வங்கவீதி’ புகழ் சந்தீப் மாதவ் இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இத்திரைப்படம் வரும் நவம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.