சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ராஜகோபால், ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால், ’மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபரை உடனே தூக்கிலிட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறாது’ எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
விஷாலின் இந்த கருத்துக்கு பதிலடிதரும் விதமாக நடிகை காயத்ரி ரகுராம், விஷால் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார். நடிகை காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், “திரைத்துறையைச் சேர்ந்த நீங்கள் துறையில் நடக்கும் பாலியல் ரீதியாக அத்துமீறல்களை முதலில் கண்டிக்க வேண்டும். சினிமாவில் நுழையும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்.
நீங்களும் உங்களது நண்பர்களும் அங்கிருந்து வந்தவர்கள்தான். நீங்கள் அனைவரும் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்து விடுவீர்கள். நிறையப் பெண்கள் உங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சினிமாத்துறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் துணையாக நீங்கள் வீரத்தைக் காண்பித்து இருக்க வேண்டும். ஆனால் நடப்பதோ இங்கு வேறாக இருக்கிறது. ஜோடியாக நடிக்கவரும் நடிகைகள் உங்களைக் கண்டு ஓடிவிடுகிறார்கள்” எனத் தாக்கி பதிவிட்டுள்ளார்.