தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எம்ஜிஆரின் கடைசி நிமிடங்கள்...!

எம்ஜிஆர் நினைவு தினமான இன்று (டிச. 24) அவரின் கடைசி நிமிடங்களை பகிர்கிறது ஈடிவி பாரத் தமிழ்.

எம்ஜிஆரின் கடைசி தரூணங்கள்...!
எம்ஜிஆரின் கடைசி தரூணங்கள்...!

By

Published : Dec 24, 2020, 7:16 PM IST

Updated : Dec 25, 2020, 6:14 PM IST

தமிழ்த்திரை உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்து, பின்னர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக 10 ஆண்டுகள் பதவி வகித்த எம்ஜிஆர் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். நேரு சிலை திறப்பு விழா நடந்து முடிந்த இரண்டு நாட்களுக்கு பிறகு, (அதாவது 24.12.1987 மாலை 5 மணிக்கு) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக தொடக்க விழா நடைபெறுவதாக இருந்தது. ஆளுநர் குரானா தலைமையில் குடியரசு தலைவர் ஆர். வெங்கடராமன், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தை தொடங்கி வைக்க இருந்தார்.

எம்ஜிஆர்
இந்நிலையில் 23ஆம் தேதி இரவில் ராமாவரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் எம்ஜிஆர் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். இரவு 12.30 மணிக்கு "கழிவறைக்கு" சென்று வந்தார். சிறிது நேரத்தில் "நெஞ்சு வலிக்கிறது" என்று கூறினார். அவருக்கு தண்ணீர் கொடுத்தார்கள். அதை வாங்கிக் குடித்ததும் மயக்கம் அடைந்தார். உடனே மருத்துவர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர். மீண்டும் இதயத்துடிப்பு வருவதற்கு உரிய சிகிச்சைகள் செய்தார்கள்.ஆனால், சிகிச்சை பலன் அளிக்கவில்லை. அதிகாலை 3 மணிக்கு உயிர் பிரிந்தது. "திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் எம்ஜிஆர் மறைந்து விட்டார்" என்று மருத்துவர்கள் அறிவித்தனர். எம்ஜிஆருக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி கிடைத்ததும், அமைச்சர்கள் ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் வீட்டுக்கு விரைந்து சென்று அங்கேயே இருந்தனர். அப்போது, எம்ஜிஆர் அருகிலேயே அழுதபடி இருந்த ஜானகி அம்மாள் மயக்கம் அடைந்தார்.பின்னர், எம்ஜிஆர் மறைவுச் செய்தியை அறிந்ததும், ஜெயலலிதா உடனடியாக ராமாவரம் தோட்டத்துக்கு விரைந்தார். கோவை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து விட்டு காலை 5.45 மணிக்கு ரெயில் மூலம் சென்னை வந்து சேர்ந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, எம்ஜிஆர் மரணச்செய்தி தெரிவிக்கப்பட்டது. துயரம் அடைந்த அவர், உடனே சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நேராக ராமாவரம் தோட்டத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள், பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் ராமாவரம் தோட்டத்துக்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.
எம்ஜிஆர்
பின்னர் எம்ஜிஆர் உடல், காலை 8.40 மணிக்கு ராமாவரம் தோட்டத்தில் இருந்து பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்த ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு போகப்பட்டது. அங்கு 6 அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டு, அதில் எம்ஜிஆர் உடல் வைக்கப்பட்டது. ராஜாஜி மண்டபத்துக்கு வெளியே லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். எம்ஜிஆர் உடலைக் கண்டு அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். எம்ஜிஆர் மரணம் அடைந்ததை அடுத்து நிதியமைச்சர் நெடுஞ்செழியன் இடைக்கால முதலமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் குரானா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எம்ஜிஆரின் மறைவு அவரது மனைவி ஜானகி அம்மாளை வெகுவாகப் பாதித்தது. அதனால், அவர் ராஜாஜி மண்டபத்துக்கு செல்ல மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. ஜானகி அம்மாளை ராமாவரம் வீட்டில் தங்க வைத்து மருத்துவர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர்.எம்ஜிஆர் உடல் வைக்கப்பட்டு இருந்த ராஜாஜி மண்டபத்திலேயே இடைக்கால முதலமைச்சர் நெடுஞ்செழியன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அண்ணா சமாதிக்கு தென்புறத்தில், எம்ஜிஆர் உடலை சந்தனப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. எம்ஜிஆர் இறுதி ஊர்வலம் ராணுவ மரியாதையுடன் நடைபெறும் என்று தலைமைச் செயலாளர் பத்மநாபன் கூறினார். எம்ஜிஆர், உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு இருந்தது. உடல் அருகே அமைச்சர்கள், எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள், கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் கண்களில் கண்ணீருடன் அமர்ந்து இருந்தனர்.
எம்ஜிஆர்
ராஜாஜி மண்டபத்துக்கு வெளியே கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம். ஆண்களும், பெண்களும் நீண்ட "கியூ" வரிசையில் நின்றனர். அவர்களில் பலர் அழுதபடி இருந்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. பொதுமக்கள் விடிய விடிய எம்ஜிஆர் உடலுக்கு மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆண்கள், பெண்கள் தனித்தனி நீண்ட கியூ வரிசைகளில் நின்றனர்.ஒவ்வொரு `கியூ' வரிசையும் 4 மைல் நீளத்துக்கு நீண்டிருந்தது. தமிழ்நாடு முழுவதும் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடைகள் மூடப்பட்டன. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சினிமா ஸ்டூடியோக்கள் மூடப்பட்டன. எம்.ஜி.ஆர். மறைவையொட்டி தமிழ்நாட்டில் ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்பட்டது. அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. எம்ஜிஆர்ருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய அளவில் ஒரு நாள் துக்கம் அனுஷ்டிக்க உத்தரவிட்டது.பிரதமர் ராஜீவ் காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "மிகச்சிறந்த பாரதக் குடிமகனின் மரணத்துக்காக நாடு துக்கம் அனுசரிக்கிறது. எம்ஜிஆர் சிறந்த தேசபக்தர். நாட்டுப்பற்று அவர் இதயத்தில் ஆழப்பதிந்து இருந்தது. இந்தியாவின் பாரம்பரியத்தில் அவர் பெருமிதம் கொண்டு இருந்தார். இந்தியாவின் ஒற்றுமையைப் புனிதமாகவும், ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதை புனிதமான கடமையாகவும் அவர் கருதினார். இந்திய மக்களால் மட்டும் அல்லாமல் இலங்கை நாட்டு மக்களாலும் போற்றப்பட்டவர். எம்ஜிஆர் அவரது மரணத்தில் என் சொந்த இழப்பு மிகப்பெரியது ஆகும்.
எம்ஜிஆர்
எம்ஜிஆர் கடைசியாக கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சி, என் தாத்தா நேருவின் சிலை திறப்பு விழா ஆகும். அவரது முடிவுக்கு 36 மணி நேரத்துக்கு முன்பாக அந்த விழா நடந்தது. அப்போது என் குடும்பத்தின் 3 தலைமுறையினருடன் அவருக்கு உள்ள தொடர்பை எடுத்துக்கூறினார். இது அவரது விடைபெறும் நிகழ்ச்சி என்று எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. ”எனக் குறிப்பிட்டிருந்தார்.
எம்ஜிஆர்
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ஆயிரம் கருத்து வேறுபாடுகளுக்கு இடையே நான் இதயப்பூர்வமாக நேசித்த என் ஆருயிர் நண்பர் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆரின் திடீர் மறைவு செய்தி கேட்டு அதிர்ந்து போய் இருக்கிறேன். 40 ஆண்டுகளுக்கு முன்பு அரும்பிய எங்கள் நட்பில் இடை இடையே எத்தனையோ சோதனைகள் குறுக்கிட்டபோதிலும் முதிர்ந்து கனிந்த எங்கள் நட்புணர்வு பட்டுப்போனதே இல்லை. என் சிந்தைக்கு இனிய நண்பர். செல்வாக்குமிக்க முதலமைச்சர் குறுகிய காலத்தில் ஒரு கட்சியை உருவாக்கி அதனை ஆளும் கட்சியாக்கிய ஆற்றல் படைத்தவரின் இழப்பு கேட்டு இந்த நாடே துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறது. அவரது மறைவால் கண்ணீர் வடிக்கும் இந்த நேரத்தில் தமிழ் மக்கள் அனைவரும் அமைதியாகவும், கசப்பு உணர்வு, காழ்ப்புணர்ச்சிகளை தவிர்த்தும், ஒற்றுமையை கட்டி காப்பதற்கும் உறுதி மேற்கொள்வோமாக. மாண்புமிகு முதலமைச்சரின் மறைவையொட்டி தி.மு.கழகத்தின் பொது நிகழ்ச்சிகள் இன்று முதல் ஒரு வார காலத்துக்கு ரத்து செய்யப்படுகின்றன”என்று கருணாநிதி கூறி இருந்தார்.
எம்ஜிஆர்
எம்ஜிஆர் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இரங்கல் செய்தி அனுப்பினார். அதில், “தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆரின் மறைவு அறிந்து நாம் அதிர்ச்சியும், வேதனையும் அடைகின்றோம். தமிழீழப் போராட்டத்தில் அவர் காட்டிய அக்கறையும், குறிப்பாக அவர் என் மீது கொண்டிருந்த அன்பையும், எமது இயக்கத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்துக்காக எம்ஜிஆர் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
Last Updated : Dec 25, 2020, 6:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details