‘விக்ரம் வேதா’ படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் மீண்டும் வில்லனாக நடித்தார். தன்னுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை மட்டும் மனதில் கொண்டு, அவர் படங்களைத் தேர்வு செய்து நடித்துவருகிறார். சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் விஜயுடன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மாளவிகா மோகனன், கியாரா அத்வானி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அக்டோபர் 3ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. டிசம்பர் மாதம் விஜய் சேதுபதி இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.