பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கார்த்திக் சுப்பராஜ். குறும்பட இயக்குநராக இருந்து 'பீட்சா' படத்தின் மூலம் பெரிய திரையில் நிகழ்த்திய மேஜிக் ரசிகர்களால் இன்றுவரை கொண்டாடப்படுகிறது.
2012ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. பீட்சாவின் வெற்றியைத் தொடர்ந்து பீட்சா -2ஆம் பாகமாக தி வில்லா என்ற பெயரில் 2013ஆம் ஆண்டு வெளியானது. அசோக் செல்வன், சஞ்சீதா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம், பீட்சா போன்று பெரிதளவில் சோபிக்கவில்லை.
பீட்சா, பீட்சா -2ஆம் பாகத்தையும் தயாரிப்பாளர் சி.வி. குமாரே தயாரித்திருந்தார். இரண்டாம் பாகம் வெளியாகி ஏழு வருடங்களை கடந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் சி.வி. குமார் தயாரிப்பில் பீட்சா படத்தின் மூன்றாம் பாகம் வெளிவர உள்ளது. பீட்சா 3, தி மம்மி என்ற பெயரில் உருவாகும் படத்தை அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்குகிறார்.