போடா போடி படத்தின் மூலம் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மாரி-2 படத்தை தொடர்ந்து தற்போது நீயா-2, வெல்வெட் நகரம் போன்ற படங்களில் நடித்து வரும் வரலட்சுமி, கன்னடத்தில் ரணம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சாமுத்ரா இயக்கும் இப்படத்தில் வரலட்சுமி சிபிசிஐடி அதிகாரியாக நடிக்கிறார்.
வரலட்சுமி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து - தாய், மகள் உயிரிழப்பு!
வரலட்சுமி சரத்குமார் நடித்து வரும் கன்னட திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பெங்களூரை அடுத்த பாகலூரில் ரணம் படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த சண்டை காட்சியில் இரண்டு கார்கள் மோதி தீ பிடித்து எரிவது போன்று காட்சியமைக்கப்பட்டது. அந்த காட்சியின்போது, எதிர்பாராத விதமாக எரிவாயு சிலிண்டர் தீ பற்றி சிதறியதில் வேடிக்கை பார்க்கவந்த பெண் ஒருவரும், அவரது 5 வயது மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பாகலூரில் படப்பிடிப்பு நடத்த ரணம் படக்குழுவினர் உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.