தொழிற்சாலைகள் நிபந்தனையுடன் செயல்பட அனுமதி கொடுத்தது போல், திரைத்துறையும் நிபந்தனைகளுடன் செயல்பட அரசு அனுமதி தரவேண்டும் என்று பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் நஷ்டமடைந்துள்ளன. அதில் திரைத்துறையும் ஒன்று. படப்பிடிப்பு இல்லாததால் தினந்தோறும் கூலி வாங்கி பிழைப்பு நடத்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், வறுமையில் சிக்கி உள்ளனர்.
இந்த நிலையில் இன்று முதல் தமிழ்நாட்டில் ஒருசில துறைகள் தகுந்த இடைவெளி கடைப்பிடித்து இயங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், திரைத்துறைக்கும் சில தளர்வுகள் வேண்டும் என்று பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், ‘இனியும் திரைத்துறையில் முடக்கம் தொடர்ந்தால், பசி, பட்டினியால் தொழிலாளர்கள் சாவை எதிர்நோக்கும் அபாயகரமான சூழல் ஏற்படும். தொழிற்சாலைகளுக்கு நிபந்தனையுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது போல், திரைத்துறையும் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி தர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சூர்யாவுக்கு ஜோடியான ராஷி கண்ணா!