28 வருடங்களை கடந்து இன்றவும் வாடாத ரோஜாவாக வலம் வந்து கொண்டிருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 54ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்திய இசை உலகமே பெருமையுடன் கொண்டாடும் ஏ.ஆர். ரஹ்மான் 1966ஆம் ஆண்டு, சென்னையில் பிறந்தார். இவருடைய அப்பா சேகர், சுமார் 50க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றிவர்.
ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்த ஏ.ஆர். ரஹ்மான் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தினர். குடும்ப சூழ்நிலை கருதி எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பயில வேண்டும் என்ற தனது சிறு வயது கனவை கைவிட்டு தந்தையின் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டு அதிலிருந்து கிடைத்த வருமானத்திலிருந்து பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் ஆகிய இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசையும் கற்றார்.
1980ஆம் ஆண்டு, தனது 13ஆவது வயதில் தூர்தர்சனில் ஒளிபரப்பான 'வொண்டர் பலூன்' எனும் நிகழ்ச்சியில், ஒரே நேரத்தில் நான்கு கீ போர்டுகளை வாசித்து, மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பாளராகச் சேர்ந்த ரஹ்மான், பின்னாளில் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடமும் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
மோகன்லாலின் யோதாவா என்னும் மலையாலப் படத்திற்கு முதல் முறையாக இசையமைத்தார் ஏ.ஆர் ரஹ்மான். அதற்கு அடுத்ததாக இசையமைத்த மணிரத்னத்தின் ரோஜா திரைப்படம் யோதாவா படத்திற்கு முன்பாகவே வெளியானதால், அதுவே அவரது முதல் படமானது. தனது முதல் படத்திலேயே தேசிய விருதினை வென்றார்.
இசையில் புதுமை புகுத்திய ரஹ்மான், கிராமியப் பாடல்களிலும், தான் சலித்தவர் அல்ல என்பதை கிழக்கு சீமையிலே, கருத்தம்மா போன்ற படங்களின் பாடல்கள் மூலம் உணர்த்தினார்.
ரங்கீலா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அவருக்கு, நாடு முழுவதும் ரசிகர்கள் திரண்டார்கள். மேலும், ஒரே ஆண்டில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். அதன் மூலம் ஒரே ஆண்டில் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார்.