தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ரம்பா. இவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், ஜூன் 5, 1974இல் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விஜயலட்சுமி. பின்னர் திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் அம்ரிதா எனவும், பின்பு ரம்பா எனவும் மாற்றிக்கொண்டார். 1993இல் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கத்தில் வெளியான ”ஆ ஒக்கடு அடக்கு” என்ற தெலுங்குப் படமே, ரம்பா நடித்த முதல் படமாகும்.
தமிழில் அவர் நடித்த முதல் திரைப்படம் கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான 'உழவன்' ஆகும். அவருடைய இரண்டாவது படமான ”உள்ளத்தை அள்ளித்தா” பெரும் வெற்றிபெற்று புகழ் சேர்த்தது. அவருடைய ரசிகர்கள் அவரை ”தொடை அழகி” என அழைத்துக் கொண்டாடினர். கதாநாயகியாக மட்டுமல்லாமல், ரம்பா தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். அவருடைய சகோதரர் வாசுவுடன் இணைந்து ”த்ரீ ரோசஸ்” எனும் தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தார். அதில் ரம்பாவுடன் இணைந்து ஜோதிகா, லைலா ஆகியோர் நடித்தனர்.