திரையுலகில் ஒருவர் கதாநாயகியாக மட்டுமே பெரும் புகழை எய்த முடியும் எனும் சம்பிரதாயத்தை உடைத்தெறிந்து, தன் அறுபது வருடக் கலையுல வாழ்வில் 1,500 படங்களை நடித்து, ஐந்து முதல்வர்கள் (அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர்) உடன் நடித்த கலைஞர் என்ற பெருமையை பெற்றவர்தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை நம் அனைவராலும் ஆச்சி என அன்புடன் அழைக்கப்படும் நடிகை மனோரமா.
இன்றளவும் மேடை நாடகங்களின் வழியாய் திரையுலகில் கால் பதிக்கவரும் பெரும்பான்மை நடிகைகளுக்கு முழுமுதல் உத்வேகமாகவும், எடுத்துக்காட்டாகவும் விளங்கி, தன் கலையுலக வாழ்வில் மக்களுக்கு புன்னகையை பரிசளித்த ஆச்சியின் குழந்தைப் பருவமோ மிகவும் துயரமானது. தன் அன்னைதான் தனக்கு அனைத்தும் எனக் குறிப்பிடும் ஆச்சி, பத்து மாதக் குழந்தையாகத் தன் அன்னையோடு சேர்த்து தன் அப்பாவாலேயே விரட்டியடிக்கப்பட்டு, பல்வேறு சிரமங்களுக்கு நடுவில் வளர்ந்து நாடகத்துறையில் கால்பதித்துள்ளார்.
கோபிசாந்தா என்பதுதான் ஆச்சி மனோரமாவின் இயற்பெயர். பின்னாளில் தன் மேடைப்பெயரான மனோரமா எனும் பெயரால் பரவலாக அழைக்கப்பட்டார். மேடை நாடகத்தில் தொடங்கி, பின்னணிப் பாடகி, நகைச்சுவை, குணச்சித்திர வேடங்கள் எனத் தன் பன்முகத்திறமையால் ஆச்சி தமிழ்த் திரையுலக நடிகைகளின் மத்தியில் தனித்து நின்றார்.
மன்னார்குடியில் பிறந்த ஆச்சிக்கு மேடை நாடகத்தில் ஒரு சிறு பெண் வராமல் போனதால் அன்றைய தினத்தில் அவருக்கு பதிலாக நடிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, தன் பாடும் திறமையால் அனைவரையும் கவர்ந்திழுத்து, அந்த நாடகத்தை கண்டவர்களை தன் அற்புத நடிப்புத்திறமையால் வியக்க வைத்தார். அதன்பின் வைரம் நாடக சபாவில் தொடர்ந்து பல சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவர், இலட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரனிடம் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆச்சியின் நடிப்புத் திறமையையும், தமிழ் உச்சரிப்பையும் கண்டு வியந்த அவர், தொடந்து அவரது மேடை நாடகங்களில் ஆச்சியை நடிக்க வைத்தார்.
மேடை நாடகங்களைத் தொடர்ந்து, முதன்முதலாக மாலையிட்ட மங்கை எனும் திரைப்படத்தின் வாயிலாக கவிஞர் கண்ணதாசனால் திரையுலகில் அறிமுகப்படுத்தபட்டவர் எனும் பெருமையும் நடிகை மனோரமாவிற்கு உண்டு. கொஞ்சும் குமரி எனும் படத்தில் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவர் பின்னர் நகைச்சுவைப் பாத்திரங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். திரையில் முன்னணி நடிகையாக வேண்டும் எனப் பல நடிகைகளும் போட்டிப்போட்டுக் கொண்டிருந்த நிலையில், நகைச்சுவை பாத்திரங்களில் மிளிர வேண்டுமென தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுத்து அந்தப் பாதையில் வெற்றியும் கண்டதால்தான் ஆச்சி இன்றளவும் நம் அனைவராலும் கொண்டாடப்படுகிறார்.
தொடர்ந்து அன்பே வா, எதிர் நீச்சல், தில்லானா மோகனாம்பாள், படகோட்டி என நாகேஷுடன் அவர் இணைந்த நகைச்சுவைப் பாத்திரங்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றன. 60கள் தொடங்கி கிட்டத்தட்ட தனி ஆளாகத் தன் நகைச்சுவை சாம்ராஜ்யத்தை விஸ்தாரித்து வந்த ஆச்சி, அதோடு நின்று விடாமல் பல்வேறு குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தார். அப்படி மனோரமாவிற்குப் பெரும் புகழை அளித்த பாத்திரம்தான் தில்லானா மோகனாம்பாளில் அவர் நடித்த ஜில் ஜில் ரமாமணி கதாப்பாத்திரம். ஜில் ஜில் ரமாமணியாக மேடையில் ’தில்லாண்டமரி டப்பாங்குத்து’ ஆட்டம் போட்டு, தொடர்ந்து வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நாயனம் வாசிக்கும் காட்சிகளில் கிட்டத்தட்ட சிவாஜி கணேசன் தான் நடிப்பதையும் மறந்து, ஆச்சியை ரசித்து அளவலாவிக் கொண்டிருப்பார். இப்படி நடிகர் திலகத்தையும் தன் நடிப்புத் திறமையால் மெய்மறக்க வைத்த பெருமை ஆச்சி மனோரமாவையே சேரும்.
Manorama as jil jil ramamani in thillana mohanambal அதன்பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற நடிகர்களுடனும் தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார் ஆச்சி. நடிகன் படத்தில் கொஞ்சம் தவறினாலும் விரசமாகிவிடக் கூடிய, 55 வயதில் சக நடிகர் சத்யராஜுடன் காதல் வயப்படும் பெண்ணாக தான் நடித்த கதாப்பாத்திரம்தான் தன் கலையுலகில் தான் கொஞ்சம் சிரமப்பட்டு நடித்த கதாபாத்திரம் என்று ஆச்சி கூறியுள்ளார். இதே போல் அவர் நடித்த வாழ்வே மாயம், மைக்கேல் மதன காமராசன் படங்களைச் சேர்ந்த மற்றும் சில கொஞ்சம் தவிறினாலும் முகம் சுழிக்க வைத்துவிடக் கூடிய கதாப்பாதிரங்களையும் நகைச்சுவை ததும்ப அவர் கையாண்ட விதம்தான் தமிழ் சினிமாவில் அவர் புகழ் நீடித்து நிற்கிறது.
Manorama comedy in Nadigan movie இப்படி நடிப்புத் திறமையால் ஒரு பக்கம் தமிழ்த் திரையுலகை ஆட்கொண்டிருந்த ஆச்சி, மற்றொரு பக்கம் தான் முதன் முதலில் நாடகத்துறையில் கால்பதிக்க பெரிதும் உதவிய பாடும் திறமையை மறந்து ஒதுக்காமல், திரையுலகிலும் பாடத்துவங்கி தனது தனித்துவக் குரலுக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். வா வாத்தியாரே ஊட்டாண்ட, முத்துக் குளிக்க வாரீகளா போன்ற பாடல்கள் பட்டித் தொட்டியெங்கும் ஒலிக்கத் துவங்கியதோடு மட்டுமின்றி, இன்றளவும் பல தொலைக்காட்சிப் பாடல் நிகழ்ச்சிகளிலும் போட்டியாளர்களின் முதன்மைத் தேர்வாக விளங்குவதே ஆச்சியின் திறமைக்கான மணிமகுடம். எம். எஸ். விஸ்வநாதன் துவங்கி ஏ. ஆர். ரஹ்மான் வரை கிட்டத்தட்ட மூன்று தலைமுறைக்கான இசையமைப்பாளர்களுக்குப் பாடிச்சென்றப் பெருமை ஆச்சியையே சேரும்.
Manorama song in may madham இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ, தேசிய விருது, கலைமாமணி விருது என தன் வாழ்நாளில் அத்தனை விருதுகளைக் குவித்த ஆச்சி, உன்னால் முடியும் தம்பியில் தோன்றிய ஒரு மாறுபட்ட பாசம் ததும்பும் அண்ணியாக, அத்தனைப் பெரிய நட்சத்திரக் கூட்டத்தின் மத்தியில் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மிளிர்ந்த ஒரு அடாவடி வேலைக்கார அம்மாவாக, பாட்டி சொல்லைத் தட்டாதே என்று சொன்னவுடன் நம் அனைவருக்கும் சட்டென நினைவிற்கு வரும் பாட்டியாக, நான் பெத்த மகனே படத்தில் ஒரு புரிதலற்ற கொடுமைக்கார மாமியாராக, இந்தியன் படத்தில் லஞ்சம் கேட்கும் ஊழியர்களிடம் வெடித்து சிதறி சாபமளிக்கும் ஒரு சாமானிய மனுஷியாக என வழங்கப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வழியாக இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஆச்சி மனோரமா. இன்று அவரது நான்காம் ஆண்டு நினைவஞ்சலி.
இதையும் வாசிங்க: பூலான் தேவி: அதிகாரவர்க்கத்தை நடுங்க வைத்த பெயர்!