பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடந்த 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் தர்ஷன்.
இவர், நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டியைக் காதலித்துவந்தார். இதனிடையே சமீபத்தில், தர்ஷன் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் சனம் ஷெட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், தற்போது தர்ஷன் தன்னைத் திருமணம் செய்ய மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்ததோடு, காவல் துறையினரிடம் புகாரளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இது குறித்து விளக்கமளித்த தர்ஷன், பச்சையப்பா சில்க்ஸ் விளம்பரத்தில் தான் நடித்தபோது, சனம் ஷெட்டி தனக்கு அறிமுகமானார் என்றும், ஆரம்ப காலங்களில் சினிமா தொழில் சார்ந்து தனக்கு சனம் ஷெட்டி அதிக அளவில் உதவிகளை செய்துள்ளார் எனவும் கூறியிருந்தார்.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் தங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்ததாகவும், பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பின்னர், தான் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் படங்களில் அவரை கதாநாயகியாக்க தன்னை வற்புறுத்தினார் என்றும் தெரிவித்தார்.
அவரை உடனடியாகத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதோடு, தவறினால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டியதாகத் தர்ஷன் கூறியிருந்தார். சனம் கொடுக்கும் நிபந்தனைகளுக்கு தன்னால் ஈடுகொடுக்க முடியாததால், அவருடனான உறவை முறித்துக் கொண்டதாகவும், எந்த நோக்கத்துக்காக சனம் ஷெட்டி இவ்வாறு செய்கிறார் எனத் தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.