என்ஜாய் கிரேட்டர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சரவணன் மற்றும் அபூபக்கர் இயக்கத்தில் உருவான படம் 'எனக்கு ஒன்னு தெரிஞ்சாகனும்'. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் நடித்துள்ளார். மேலும் அறிமுக நடிகராக கிரண், அறிமுக நடிகைகளாக மேக்னா மற்றும் நியா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தேவ் ஓங்கா இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது .
இந்த விழாவில் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் பவித்ரன், இயக்குநர் அரவிந்த் ராஜா, சண்டைப் பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், ' நான் 1964ஆம் ஆண்டு நடிகனாக வேண்டும் என்ற ஆசையுடன் லாரி ஏறி 300 ரூபாயுடன் சென்னை வந்தேன். நான் நடிக்க வந்தபோது என்னை குறை சொல்லாதவர்கள் இல்லை. மூக்கு பெரிதாக இருக்கிறது. கண்கள் சிறிதாக இருக்கிறது என்று திரைத்துறையில் ஒதுக்கப்பட்ட நான், அதன்பிறகுதான் இயக்குநரானேன்.
இப்போது 79 வயதில் நடிக்கக் கூப்பிடுகிறார்கள். 1964இல் நடிகனாக ஆசைப்பட்ட நான், 2020இல் நடிகனாகி விட்டேன். சம்பாதிப்பதை விட ஒரு நிமிடமாவது நமக்கு பிடித்தமான வாழ்வை வாழ்வதில்தான் தன்னிறைவு கிடைக்கும். அப்துல்கலாம் போன்றவர்கள் பிடித்ததை செய்ததால் தான் அவர்களின் துறையில் வெற்றிபெற முடிந்தது. சினிமாவில் யதார்த்தம் 75 விழுக்காடும், ஒப்பனை 25 விழுக்காடும் தேவை. படத்தில் விஜி மீனவப் பெண்களுக்கான மொழியை இன்னும் கொஞ்சம் கவனத்துடன் கையாண்டிருக்க வேண்டும். கடலை அதிகமாக திரைப்படங்களில் சொன்னவன் நான், என் பூமியை விட அழகானது கடல்' என்றார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஜாகுவார் தங்கம் பேசுகையில், ' இயக்குநர் இமயம் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் தலைமகனும் பாரதிராஜா தான். அவர் நடத்துகிற ஒவ்வொரு போராட்டத்திலும் அவருடன் இணைந்து நாங்கள் செயல்படுவோம்.
ஜாகுவார் தங்கம் சிறப்புரை ரஜினி நடித்த 'தர்பார்' படம் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் தற்போது வெளிவந்துள்ளது. அவர் நடிகராக இருந்து அரசியலுக்கு வர இருக்கிறார். அப்படி இருக்கிற ஒருவரின் படம், தற்போது திரைக்கு வந்த முதல் நாளே இணையத்தில் வெளியாகியுள்ளது . இதைத் தடுக்க முடியாத ரஜினி, அரசியலில் என்ன செய்யப் போகிறார். நினைத்தால் இதைத் தடுத்திருக்கலாம். நடிகர் ரஜினியால் இதுதொடர்பாக பிரதமர் அவர்களை சந்தித்து மனு கொடுக்க முடியும். இதனைத் தடுக்க முடியும். ஒரு தயாரிப்பாளர் வாழ்வதற்கு பெரிய நடிகர்கள் முன் வரவேண்டும்.
இந்தப் படத்தின் நாயகன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அல்ல. வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர். வந்தாரை வாழவைக்கும் தமிழகம். இங்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நடிக்க இடம் உள்ளது. ஆனால், ஆட்சி செய்ய இடமில்லை. தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க:
அறிவார்ந்த கதாபாத்திரம் பேட்மேன் - ராபர்ட் பேட்டின்சன் பெருமிதம்!