மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'திருஷ்யம்' திரைப்படம் மூலம் தென்னிந்திய திரையுலகை வியக்க வைத்தவர் இயக்குநர் ஜீத்து ஜோசப்.
இதற்கு முன்பு, மெமரீஸ், மை பாஸ் உள்ளிட்ட மலையாள திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். திருஷ்யம் மாறுபட்ட கதைக்களத்துடன் க்ரைம் திரில்லராக வெளியாகி ரசிகர்களை மெய்சிலிர்க்க செய்தது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் கமல்ஹாசன், கௌதமியை வைத்து திருஷ்யம் படத்தின் ரீமேக்கான 'பாபநாசம்' படத்தை இயக்கினார். இந்தப் படமும் சூப்பர்ஹிட் ஆன நிலையில், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜீத்து ஜோசப் 'த பாடி' என்னும் படம் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார். இம்ரான் ஹாஷ்மி, சோபிதா துலிபாலா, வேதிகா, ரிஷி கபூர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை ஜீத்து ஜோசப் தனக்கே உரித்தான பாணியில் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாக்கியுள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது, அதில் மார்சுரியில் இருந்து காணாமல் போகிறது சோபிதா துலிபாலாவின் சடலம். அந்த சடலத்தை தேடும் காவல் துறை அதிகாரியான ரிஷி கபூர், அதைத் தொடர்ந்து நடந்தேரும் சம்பவங்கள் என படத்தின் ட்ரெய்லரிலேயே அதகளம் செய்திருக்கிறார் ஜீத்து ஜோசப்.
இதனையடுத்து தற்போது 'ஆய்னா' என்னும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது. பாடல் கேட்கும் போது இம்ரான் ஹாஷ்மி - வேதிகாவின் காதலை வெளிப்படுத்தும் ரொமாண்டிக் பாடலாக இருக்கலாம் என தெரியவருகிறது. இப்படத்தை டிசம்பர் 13ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.