இயக்குநர் சுசீந்திரன் சிம்புவை வைத்து ஈஸ்வரன் என்னும் புதிய படத்தை இயக்கிவருகிறார். இப்படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். இதில் சிம்புவுடன் நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.
சிம்புவின் 46ஆவது படமான இப்படம் திண்டுக்கல்லைச் சுற்றி படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் சிம்பு தனது தோளில் பாம்புடன் தோன்றியிருந்தார். இந்தப் போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலானது.
இதனையடுத்து ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு காட்சியென்று சமூகவலைதளப்பக்கத்தில் வெளியானது. அதில் சிம்பு மரத்தில் இருந்து பாம்பை சாக்குப்பையில் போடுவது போன்று உள்ளது.
இந்தியாவில் அனைத்துவித பாம்பு வகைகளும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாகும். இதில் சிம்பு பிடித்த பாம்பு வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தில் 2ஆவது பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
பாம்புகளை சினிமாவில் பயன்படுத்தும்போது அதன் வாய் தைக்கப்பட்டோ அல்லது பல் எடுக்கப்பட்டோ இருக்கும். இந்தப் படத்தில் சிம்பு பாம்பை துன்புறுத்துவதாக கூறி விலங்கு நல ஆர்வலர்கள் வேளச்சேரியிலுள்ள வனத் துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.