இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், இயக்குநர் பாக்யராஜ், நடிகர் பிரபு, நடிகர் அர்ஜுன், நடிகை சச்சு, கலைப்புலி தாணு, கவிஞர் பா. விஜய், மகாலிங்கம், வசனகர்த்தா ஆரூர்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இயக்குநர் மோகன் ராஜா, நடிகர் ஜெயம் ரவி இணைந்து வரவேற்புரை ஆற்றினர். எடிட்டர் மோகன் எழுதிய 'தனிமனிதன்' புத்தகத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட நடிகர் அர்ஜுன் பெற்றுக் கொண்டார். வரலட்சுமி மோகன் எழுதிய 'வேலியற்ற வேதம்' புத்தகத்தை ஷோபா சந்திரசேகர் வெளியிட நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார்.
விழாவில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசுகையில்,
''நானும் எடிட்டர் மோகன் மாதிரி சினிமாவில் சாதிப்பதற்காக சென்னைக்கு வந்தவன் தான். ஆனால், அவர் மதுரையில் இருந்து நடந்தே சென்னைக்கு வந்தார். நான் ரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் திருட்டு ரயிலில் வந்தேன். அவர் பாண்டிபஜாரில் பிளாட்பாரத்தில் படுத்து உறங்கினார். நானும் அதேபோன்று அதே இடத்தில் படுத்து உறங்கினேன்.
எடிட்டர் மோகன் குடியிருந்த வீட்டின் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் காதலித்தார். நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் பெண்ணை காதலித்தேன். அவருடைய திருமணம் மாதிரி எனக்கும் மதம் மாறிய காதல் திருமணம்தான். என் மகனை நான் நடிகனாக்கினேன். மோகன் இயக்குநராக்கியிருக்கிறார். இதுபோல எனக்கும் அவருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்பதை, அவருடைய புத்தகத்தைப் படித்து தெரிந்து கொண்டேன். அதிலும் எனக்குப் பிடித்த வரிகள் வரலட்சுமியை வரம் என்று குறிப்பிட்டது' என்றார்.
விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில்,
''சினிமாவில் நான் நேசிக்கும் மரியாதைக்குரிய மனிதர் எடிட்டர் மோகன். இந்தப் புத்தகத்தில் அவர் மதுரை திருமங்கலத்திலிருந்து நடந்தே வந்தார் என்று எழுதியதைப் படித்தப் பிறகு, இன்னமும் என் மனதில் அது தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பிள்ளைகளைப் பெற்றோர் முன்னேற்றுவதும், பெற்றோருக்குப் பிள்ளைகள் கடமை ஆற்றுவதும் இப்படி ஒரு குடும்பம் அமைவதும் மிக அரிது மற்றும் பெருமைக்குரியது'' என்றார்.