ஹாலிவுட் சினிமாவில் மிக உயரிய ஒன்றாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நடைபெறும் இவ்விருது விழாவிற்காக உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் காத்திருப்பர். ஆஸ்கருக்கான பரிந்துரையில், ஒரு திரைப்படம் இடம்பெற வேண்டும் என்றால் அத்திரைப்படம் குறைந்தது ஏழு நாட்களுக்காவது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள திரையரங்கத்தில், திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்ற விதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் கரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், தயாரிப்பாளர்கள் பலரும் தங்களது படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதனால் ஆஸ்கர் விதிமுறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்படும் படங்களும் அடுத்த ஆண்டு நடைபெறும் (2021ஆம் ஆண்டு) ஆஸ்கர் விழாவில் போட்டியிடலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.