சென்னை: மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் த்ரிஷ்யம் 2 படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் த்ரிஷ்யம் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து மோகன்லால் - இயக்குநர் ஜீத்து ஜோசப் கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
இந்தப் படத்தின் டீஸரை புத்தாண்டு நாளான இன்று (ஜன. 1) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். "ஜார்ஜ் குட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் விரைவில் வருகிறார்கள்" என்று குறிப்பட்டு நடிகர் மோகன்லால் படத்தின் டீஸரை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
முதல் பாகத்தின் க்ளைமாக்ஸ் காட்சியோடு தொடங்கும் டீஸர், தற்போது ஜார்ஜ் குட்டியின் வீடு அவரது மனைவி, மகள்கள் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் தோன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு இடையில், "சில ரகசியங்கள் என்றென்றும் மறைக்கப்பட வேண்டும்.
ஆனால் வெளிப்படுத்துவதற்கு எந்த ரகசியமும் இல்லை" என்ற எழுத்து குறிப்புகள் தோன்றுகின்றன. முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இந்தப் பாகமும் உருவாகியுள்ளது.
அத்துடன், மற்றொரு சர்ப்ரைஸாக இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
த்ரிஷ்யம் படத்தின் பிரதான கதாபாத்திரமான ஜார்ஜ் குட்டி குடும்பம் மீண்டும் வருகிறார்கள் என்று குறிப்பிட்டு த்ரிஷியம் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. கேரள மாநிலம் தொடுப்புழா, கொச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
முதல் பாகத்தில் தோன்றிய மீனா, அன்ஸிபா ஹாசன், எஸ்தர் அனில் என முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறவுள்ளன. இந்த பாகத்தில் கூடுதலாக முரளி கோபி, சாய் குமார் உள்ளிட்ட சிலர் புதிய கதாபாத்திரங்களாக தோன்றவுள்ளனர்.
படத்துக்கு இசை - அனில் ஜான்சன். ஒளிப்பதிவு - சதீஷ் குருப். ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தை பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, மொழி கடந்து அனைத்து தரப்பினராலும் கவரப்பட்ட படம் த்ரிஷ்யம். சூப்பர்ஹிட்டான இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பினால் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இதையடுத்து தற்போது படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பழமைவாதத்தை உடைக்கும் நேரமிது: ஷில்பா ஷெட்டி