இந்தோ சினி அப்பிரிஷேசன் அறக்கட்டளை மற்றும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் டாக்டர் கே.சி.ஜி வெர்கீஸ் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் உள்ள சிட்டி சென்டரில் நடைபெற்றது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எட்டு படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த விழாவில் இயக்குநர் பாரதிராஜா, நடிகை அமலா பால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திரைப்பட விழாவில் பாரதிராஜா பேச்சு இவ்விழாவை தொடங்கிவைத்து பேசிய இயக்குநர் பாரதிராஜா, ”முன்பெல்லாம் டெல்லியில் மட்டுமே சர்வதேச திரைப்பட விழாக்கள் நடைபெறும். இதுபோன்ற விழாக்களில் திரையிடப்படும் படங்களை தேடி சென்று பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றைய காலகட்டங்களில் அப்படி இல்லை. நம் வீட்டிற்கு வந்து படம் காட்டும் அளவிற்கு தொழில்நுட்பம் முன்னேறி உள்ளது. இந்த விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்.
25வது ஆண்டு வெர்கீஸ் திரைப்பட விழா சினிமா ஒரு அற்புதமான கலை. இந்த பாரதிராஜா இந்த மேடையில் நின்று பேசுகிறேன் என்றால் அதற்கு ஒரே தகுதி சினிமாதான். என் இறுதி மூச்சுவரை நான் சினிமாவை நேசிப்பேன் கடவுள் வந்து என்னிடம் அடுத்த பிறவியில் நீங்கள் அம்பானியாக பிறக்க வேண்டுமா என்று கேட்டால், இல்லை நான் பாரதிராஜாவாக இருக்க விரும்புகிறேன் என்று கூறுவேன். ’ஆடை’ படம் நான் இன்னும் பார்க்கவில்லை. படம் எடுப்பதற்கான எல்லையைத் தாண்டினால்தான் அவன் ஒரு கலைஞன். நான் சில எல்லைகளை தாண்டி இருக்கிறேன். அமலா பாலுக்கும், இயக்குநருக்கும் எனது பாராட்டுக்கள்” என்றார்.
இதனையடுத்து நடிகை அமலாபால் பேசுகையில், ”இந்த ஃபிலிம் ஃபெஸ்டிவலில் முதலில் எனக்கு பிடித்த ஒரு விஷயம் இந்த ஃபிலிம் ஃபெஸ்டிவலில் 'Fear Less Humanity' என்ற தலைப்புதான். தற்போது சமூகத்தில் அதிகளவில் வெடிகுண்டு, சாதி, மதம் மற்றும் போர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில், ஒரு தீம் எடுத்து இந்த விழாவினை நடத்துவது மிகவும் மகிழ்ச்சி" என்றார்.