ஹவுஸ் ஓனர் என்றால் என்ன?
ஹவுஸ் ஓனர் என்றால்... வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஹவுஸ் ஓனரைப் பார்த்து பயப்படுவார்கள் போன்ற சிக்கல்களைப் பற்றிக் கூறும் படம் என்று எல்லாரும் நினைப்பார்கள். இந்தப் படத்துக்கும் வாடகை வீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பவரின் செல்லப் பெயர்தான் ஹவுஸ் ஓனர். அவருடைய மனைவி அவரை ஹவுஸ் ஓனர் என்று அழைப்பார். அதனால்தான் இப்படத்தின் பெயர் ஹவுஸ் ஓனர்.
இந்த படம் முழுக்க முழுக்க தண்ணீர் சூழ படமாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இது சென்னையில் வெள்ளம் வந்தபொழுது நடந்த ஒரு கதையா?
ஆமாம், 24 மணிநேரத்தில் நடக்கும் ஒரு தம்பதியின் கதை இது. சென்னையில் வெள்ளம் வந்த நேரத்தில் 2015 டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி காலை 8 மணி முதல் அடுத்த நாள் காலை 8 மணி வரை நடக்கும் விஷயங்கள்தான் இப்படத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. இரண்டு கதாபாத்திரங்கள், ஒரு வீடு, மழை இவ்வளவுதான் இந்த கதையில் உள்ளது. ஆனால் ஆண் வீட்டுக்குள்ளேயே ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அந்த இரண்டு கதாபாத்திரங்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவர்களை ஏன் உங்களுக்கு பிடிக்க வேண்டும் அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதெல்லாம் இந்தக் கதையில் சுவாரசியமாகக் கூறுகிறோம். இவை தவிர 45 ஆண்டுகால அவர்களுடைய வாழ்வில் இருந்த காதல் ஆகியவற்றையும் அழகாக கூறியுள்ளோம்.
இரண்டு தம்பதிகளை வைத்து கதையை சுவாரசியமாக நகர்த்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இதைத்தவிர படத்தில் சிஜி வொர்க் இல்லாமல் பணியாற்றியது இரண்டாவது மிகப்பெரிய சவால். அண்டர் கிரவுண்டில் ஒரு வாட்டர் டேங்க் கட்டி அதற்குள் 12 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க் அதற்குள் ஒரு வீடு என நாம் எப்பொழுதும் வீடு கட்டுவது போல் சிமெண்ட் மண் வைத்து இந்த வீட்டைக் கட்டி படப்பிடிப்பு நடத்தினோம் அதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இது வயதானவர்களின் ஃப்ளாஷ்பேக் கூறும் கதையா?
இல்லை. என் வயதில் காதல் இருக்கிறது என்றால் அது ஆர்ட்டிஃபிஷியல் ஆக இருக்கும். ஆனால் இந்தக் காதலை சுவராசியமாகக் கூற வேண்டும். இதற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது எனது அப்பாவும், அம்மாவும்தான். எங்க அப்பாவுக்கு 85 வயதாகும்போது சதாபிஷேகம் நடந்தது. அப்பொழுது என் அப்பா தாலி கட்டும்போது அம்மா புதுப்பெண் போல வெட்கப்பட்டார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த ஒரு விஷயத்தைதான் கையில் எடுத்துக்கொண்டு அவர்களுக்குள் இருக்கும் ஒரு இன்னசெண்ட் காதலை கூறியிருக்கிறேன். இது இளைய தலைமுறையினர் ரசிக்கும் வகையில் இருக்கும்.
லட்சுமி ராமகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி நீங்கள் இதுவரை மூன்று திரைப்படங்களை எடுத்துள்ளீர்கள் அதில் விளிம்பு நிலை மக்கள் குறித்த கதைகள்தான் இருந்தது. இந்தக் கதையும் அப்படித்தானா?
இல்லை இந்தக் கதை நான் பிறந்து வளர்ந்து வந்த பின்னணியில் உள்ள கதைதான். முன்பு நான் எடுத்த படங்களில் விளிம்பு நிலை மக்கள் கதைகளை ஏன் எடுத்தேன் என்றால் நான் பார்த்து வியந்த மனிதர்கள் அவர்கள். அதனால் அது போன்ற கதைகளை முதலில் எடுத்தேன். சேரியில் வாழ்க்கை நடத்தும் ஒவ்வொரு தாயாரையும் பார்க்கும்பொழுது எனக்கு ஒரு ஹீரோவாக தெரியும். அதே போன்று தந்தையர்களும் இருப்பார்கள். இது நம் நாட்டில் மட்டுமே பார்க்க முடியும். அதனால்தான் முதலில் அந்தக் கதைகளை நான் எடுத்தேன். இந்த ஹவுஸ் ஓனர் படத்தில் நான் என்னுடைய பேக்ரவுண்டில் உள்ள கதைகளை எடுத்துள்ளேன்.
இந்த படத்தில் இசை முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது, இசை பற்றி...?
இந்தப் படத்தோட இசையமைப்பாளர் ஜிப்ரான். அவர் 100% அர்ப்பணிப்போடு பணியாற்றினார். படத்திற்குத் தேவையான விஷயங்களை இசையாக மாற்றி அழகாக வழங்கியுள்ளார். இது படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
பெண் இயக்குநராக இந்தப் படத்தின் மூலம் நீங்கள் கூற வரும் கருத்து என்ன?
இயக்குநர்களில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை. ஆனால் பெண் இயக்குநர்கள் கூறும் கதைகள் மற்றொரு கோணத்தில் இருக்கும். இந்தப் படத்தின் மூலம் ஒவ்வொரு ஆணும் அவர்களுடைய தாய் தந்தையை கண்டிப்பாக பார்ப்பார்கள். காதல் செய்யப் போகிறவர்கள், செய்பவர்கள் இந்தப் படத்தோடு தங்களை இணைத்துப் பார்ப்பார்கள். அந்த அளவுக்கு இந்தப் படத்தில் அதிகமான வாழ்க்கை அனுபவங்கள் உள்ளன.