பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், தனது தோழி வள்ளி ஷெட்டி பவானி (28) மற்றும் இரு ஆண் நண்பர்களுடன், ஜூலை 25 அதிகாலை புதுசேரியில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு பகுதியில், இவர்கள் வந்த கார் சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் மற்றும் இரு நண்பர்கள், படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் நடராஜன், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில், யாஷிகா ஆனந்த் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதனால், யாஷிகா ஆனந்த் மீது 304ஏ, 337, 279 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
யாஷிகா குடித்துவிட்டு வண்டி ஓட்டியதுதான் இந்த விபத்துக்கு காரணம் என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். சமீபத்தில் ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட யாஷிகா, தான் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு விளக்கமளித்தார்.