சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவர் பைரவி செந்திலிடம் நடிகை ரைசா வில்சன் முகப்பொலிவு சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதன்பின்னர் அவர் கண்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன், கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டதாக புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். தனக்கு ஏற்பட்ட விளைவுகளுக்கு தவறான சிகிச்சையே காரணம் என்பதால் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி ரைசா வில்சன், மருத்துவர் பைரவி செந்திலுக்கு எதிராக தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பிருந்தார்.
இந்நிலையில், மருத்துவர் பைரவி செந்திலும் அவரது வழக்கறிஞர் ஆர். நாகேஷ்வரராவ் மூலமாக, நடிகை ரைசா வில்சனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், தோல் ஆரோக்கியம், முகப்பொலிவுக்காக தன்னை அணுகியபோது, சிகிச்சைக்கு ஒத்துக்கொள்வதாக தானாக முன்வந்து ஒப்பந்தத்தில் ரைசா கையெழுத்திட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ரைசாவிற்கு ஏற்பட்டுள்ளது பயப்படக்கூடிய பக்கவிளைவுகள் இல்லை என்றும், அரிதாக ஏற்படக்கூடிய விளைவுதான் என்றும், இயற்கையாகவே குணமடையக்கூடிய ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.