பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று முன்தினம் (ஜுன். 7) தனது மகனுடன் சென்னையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திய பின்னர் எடுத்த புகைப்படத்தை 'தடுப்பூசி போட்டாச்சு... நீங்க..?’ என்ற கேப்ஷனுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
அப்போது அவர் அணிந்திருந்த சற்றே வித்தியாசமான முகக்கவசம் குறித்த தகவல்களை நெட்டிசன்கள் ஆராயத் தொடங்கினர். அவரது ரசிகர்கள் பலரும் அந்த முகக்கவசம் எங்கு கிடைக்கும்? என்ன விலை? என்பது போன்ற கேள்விகளால் ரஹ்மானின் பதிவை நிரப்பத் தொடங்கினர். பலரும் அந்த மாஸ்க் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிடத் தொடங்கினர்.
ரஹ்மானின் ஹைடெக் முகக்கவசம்
ரஹ்மான் அணிந்திருந்த ஹைடெக் முகக்கவசம் எல்ஜி நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த முகக்கவசத்தின் இரு புறங்களிலும் காற்று சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சுத்திகரிப்பான்கள் வெளியே இருந்து காற்றை சுத்திகரித்து உள்ளே அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மாஸ்க்கைப் போல் இல்லாமல் இதனை எத்தனை மணிநேரங்கள் வேண்டுமானாலும் இடையூறு இன்றி இதனை அணிந்துகொள்ள முடியும். சுத்திகரிப்பான்கள் மட்டுமின்றி முகக்கவசத்தில் சென்சார் ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கிறது. இது மாஸ்க் அணிந்திருப்போரின் சுவாச சுழற்சிக்கு ஏற்ப அளவை மாற்றிக் கொள்ளும்.