தமிழ் சினிமாவில் நடிகராக நடிகையாக இயக்குநராக கோலோச்சியவர்களின் வாரிசுகளும் சினிமாவில் நுழைந்து வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் தற்போது இயக்குநர்களின் மகள்கள் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் காலம் என்றே சொல்லலாம்.
சமீபத்தில், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'விருமன்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஏற்கனவே பாக்யராஜின் மகள் சரண்யா பாக்யராஜ் 'பாரிஜாதம்' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். ஆனால் படம் தோல்வியடையவே அதோடு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார்.
நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா. விஷால் நடித்த 'பட்டத்து யானை' படத்தில் அறிமாகமானார். அதன்பிறகு ஒன்றிரண்டு படங்களில் நடித்தவருக்கு தமிழ் சினிமா போதிய வரவேற்பு அளிக்கவில்லை.
இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. 'சென்னை 28', 'அஞ்சாதே', 'சரோஜா' சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'கசடதபற' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அகத்தியனின் இளைய மகள் நிரஞ்சனியும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இனி படங்களில் நடிப்பாரா என்பது தெரியவில்லை.
நடிகையான இயக்குநர்களின் மகள்கள் நடிகரும் இயக்குநருமான உலகநாயகன் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் இருவருமே தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்துள்ளனர். இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனும் தும்பா, அன்பிற்கினியாள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த வரிசையில் தற்போது ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி 'தரமணி' பட நடிகர் வசந்த் ரவியின், புதிய படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். அதிதியும் சரஸ்வதியும் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: பூஜையுடன் தொடங்கியது கார்த்தி நடிக்கும் விருமன்