ஜூலை 21 நடக்கவிருக்கும் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, கே.எஸ். ரவிக்குமார், அமீர், ஜனநாதன், பி.வாசு, ஆர்.கே. செல்வமணி, ரமேஷ் கண்ணா, ராம்கி போன்றோர் வெவ்வேறு பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதி இயக்குநர் அமீர், ஜனநாதன் ஆகியோரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது .
இயக்குநர் சங்கத் தேர்தல்! ஆர்.கே.செல்வமணி-வித்யாசாகர் போட்டி - rk selvamani
சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே செல்வமணி - வித்யாசாகர் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
இதனையடுத்து, இயக்குநர் அமீர் தலைமையிலான அணி இந்தத் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று கூறி தேர்தலில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையின்படி இயக்குநர் கரு பழனியப்பன், சமுத்திரக்கனி, வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட 13 இயக்குநர்கள், இயக்குநர் சங்கத் தேர்தல் அலுவலர் தற்போது பதவியில் இருக்கும் நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டியிருந்தனர். மேலும், அமீர் அணியினர் விலகியதை அடுத்து பொதுச்செயலாளர் பதவிக்கு ஆர்.வி. உதயகுமார், பொருளாளர் பதவிக்கு பேரரசு போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்நிலையில், ஜூலை 21ஆம் தேதி நடக்கவிருக்கும் இயக்குநர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி, வித்யாசாகர் போட்டியிடுகின்றனர். அதேபோல் துணைத் தலைவர் பதவிக்கு கே.எஸ். ரவிக்குமார், வேல்முருகன், ரவி மரியாவும் இணைச் செயலாளர் பதவிக்கு லிங்குசாமி , சுந்தர்.சி உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர்.