சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள திரைப்படம் ‘கென்னடி கிளப்’. ஆண்கள் கபடியை மையமாக வைத்து ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் சுசீந்திரன். தற்போது பெண்கள் கபடியை மையமாக வைத்து ‘கென்னடி கிளப்’ படத்தை இயக்கியிருக்கிறார். நெல்லுசாமி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.
இது குறித்து சுசீந்திரன் உடன் ஒரு சிறப்பு நேர்காணல்
இந்த படம் குறித்த உங்கள் கருத்து?
ரொம்ப சந்தோஷமா இருக்கு வெண்ணிலா கபடி குழு மாதிரி இந்த படமும் பெரிய ஹிட்டாகும் என்று படம் பார்த்தவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வெளியூரில் இருந்து நிறைய போன் கால் வருகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு நடிகர் சசிகுமாருக்கும் எனக்கும் மிகப்பெரிய ஹிட் இந்த படம். கண்டிப்பா கபடியில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன்.
இயக்குநர் பாரதிராஜாவுடன் பணியாற்றியது குறித்து ?
இயக்குநர் பாரதிராஜா ஸ்கிரீனில் வந்து நின்றாலே திரையில் ஒரு பிளசன்ட் ஆக இருக்கும். படம் பார்த்த அனைவரும் பாரதிராஜாவின் நடிப்பு அருமையாக இருந்தது என்று பாராட்டினார்கள். பாண்டிய நாட்டிற்கு பிறகு பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.
கண்டிப்பாக இந்த படத்தில் அவருக்கு தேசிய விருது கிடைக்கும். அவருடைய பங்களிப்பு மிக முக்கியமானது. ஏனென்றால், கிளைமாக்ஸ் அவர் மீது தான் இருக்கும். படம் பார்த்த அனைவரும் கிளைமாக்ஸ் அருமையாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். மிகவும் சந்தோஷமாக உள்ளது.
நடிகர் சசிகுமாருடன் பணியாற்றியது குறித்து?
நடிகர் சசிகுமார் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். நடை உடை சிகை அலங்காரம் என அனைத்தையும் மாற்றியுள்ளார். கபடி பயிற்சியாளராக முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.