தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’'அந்நியன்' என் உரிமை...என் படைப்பு’ - பதிலடி கொடுத்த ஷங்கர் - இயக்குர் ஷங்கரின் படங்கள்

'அந்நியன்' இந்தி ரீமேக் தொடர்பான ஆஸ்கர் ரவிச்சந்திரனின் கடித்துக்கு இயக்குநர் ஷங்கர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

shankar
shankar

By

Published : Apr 15, 2021, 7:51 PM IST

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியாகி ஹிட் அடித்த படம் அந்நியன். இப்படத்தை ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் எடுக்க உள்ளதாக ஷங்கர் முன்னதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இன்று (ஏப்ரல் 15) ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில், இயக்குநர் ஷங்கர் தற்போது பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஷங்கர் கூறியிருப்பதாவது, "'அந்நியன்' திரைப்படத்தின் கதைக்கு நீங்கள் உரிமை கோரிய ஈ-மெயிலை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்நியன் 2005ஆம் ஆண்டு வெளியானது. படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் படத்தின் கதை, திரைக்கதை என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன் 'அந்நியன்' படம் வெளியானது. படத்தின் திரைக்கதையை எழுத யாரையும் நான் அதிகாரப்பூர்வமாக நியமிக்கவில்லை. எனவே இந்தத் திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக்கொள்ள எனக்கு உரிமை உள்ளது. படைப்பை எழுதியவன் என்ற முறையில் எந்தச் சூழலிலும் எனதுஉரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது.

மறைந்த சுஜாதாவின் பெயரை இதில் சம்பந்தப்படுத்தியதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அவர் இந்தப் படத்துக்கு வசனங்கள் எழுத மட்டுமே நியமிக்கப்பட்டார். அதற்கான உரிய பெயரும் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் திரைக்கதையிலோ, பாத்திரப் படைப்பிலோ எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை. எனவே வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை.

திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக்கொள்ளும் முழு உரிமை எனக்குள்ளது. என் அந்நியனுக்காக நீங்களோ உங்கள் நிறுவனமோ எந்த விதமான உரிமைகளையும் கோர முடியாது. படத்தை ரீமேக் செய்யவும் முடியாது. ஏனென்றால் அந்த உரிமை எழுத்துப்பூர்வமாக உங்களுக்கு தரப்படவில்லை. அப்படி எதுவும் இல்லாத நிலையில், படத்தின் கதைக்கான உரிமை உங்களிடம் உள்ளது என்பதைச் சொல்லை உங்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை.

ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதில் கடிதம் அனுப்பிய ஷங்கர்

ஒரு தயாரிப்பாளராக 'அந்நியன்' படத்தின் மூலம் கணிசமான லாபம் அடைந்துள்ளீர்கள். தற்போது தேவையில்லாமல் உங்களுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சிகளின் மூலம் உங்களுக்காக ஆதாயம் தேடப் பார்க்கிறீர்கள். இந்த விளக்கத்துக்குப் பிறகாவது உங்களுக்கு சரியான புரிதல் வரவேண்டும்.

இது போன்ற மோசமான, சட்டவிரோதமான உரிமை கோரல்களால் எனது எதிர்கால திரைப்படங்கள் பாதிக்கப்படும் என்பதால், ஒரு இயக்குநராக, கதாசிரியராக உண்மையான நிலை குறித்த தெளிவைத் தரவே எந்தவித பாரபட்சமுமின்றி இந்த பதில் அளிக்கப்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அந்நியன் இந்தி ரீமேக் - ஷங்கருக்கு புதிய சிக்கல்!

ABOUT THE AUTHOR

...view details