கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்ற பாதையை தனித்தே உருவாக்கியுள்ளவர் இயக்குநர் சீனுராமசாமி.
பசுமை மாறாத கிராமத்து காவியங்களை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற கோணத்தில் சித்தரிக்கும் கைவண்ணம் கொண்ட சீனுராமசாமி, வாழ்க்கை இயலை வழக்கத்துக்கு மாறாமல் இயல்பாக மக்களிடையே கொண்டு சேர்த்திருக்கிறார்.
கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா வரிசையில் நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ்த்திரையுலகம் கொண்டாடும் இயக்குநர் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் சீனுராமசாமி, மதுரையில் பிறந்தவர்.
சினிமா மீது கொண்ட தீராத காதலால் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின் கூடல் நகர் படம் மூலம் அறிமுகமானார். 2010ல் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படமே இவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது. இரண்டாவது படத்தின் வெற்றி சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்து அவருக்கு மகுடம் சூட்டியது.