’பிச்சைக்காரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சசி இயக்கியுள்ள திரைப்படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் நாயகர்களாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ், தீபா இராமானுஜம் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
போக்குவரத்து காவலராக சித்தார்த்தும், பைக் ரேஸராக ஜி.வி. பிரகாஷும் நடித்துள்ளனர். அதிரடி சண்டைக் காட்சிகள், அட்டகாசமான பைக் சேசிங் காட்சிகளுடன் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இயக்குநர் சசி ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
சிவப்பு மஞ்சள் பச்சை படம் அவசரத்தில் வெளியிட்ட படமா?
ஒரு நாளுக்கு முன்புதான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய போகிறோம் என்று முடிவு செய்தோம். மிகவும் குறைந்த கால அவகாசத்தில் இந்த படம் திரையரங்கிற்கு வந்துள்ளது. நாங்கள் நம்பியது ஒரே விஷயம்தான். இந்தப்படத்தில் மக்களுக்கு பிடித்த கன்டென்ட் உள்ளது.
இந்த நம்பிக்கையில்தான் தைரியமாக இந்த படத்தை ரிலீஸ் செய்தோம். முதல் நாள் படம் பார்த்த 90 சதவிகிதம் மக்கள் படம் சூப்பர் என்றார்கள். பெரும்பாலான மக்கள் மிகவும் நெகிழ்ந்து போனார்கள். இதைதான் நாங்கள் எதிர்பார்த்தோம்.
மாமன் மச்சான் உறவு குறித்து கதை உருவாக காரணமாக அமைந்தது எது?
இதுவரை சினிமாவில் சொல்லப்படாத உறவுமுறை எது என்று யோசித்தபோது இந்தக் கதை தோன்றியது. என்னுடைய நண்பர் ஒருவரின் மனைவிக்கு ஒரு சகோதரன் இருக்கிறான். அவன் அவனை மிகவும் மதிப்பான் . அவனோடு அமர்ந்து பீர் குடிப்பான். இரண்டு பீர் குடிப்பதற்கு மட்டுமே அனுமதிப்பான். மூன்றாவது பீரை கையில் எடுத்தால் அதை தடுத்துவிடுவான். ஏன் என்று கேட்டால் என் அக்காவின் வாழ்க்கை என்று கூறுவானாம்.
இதேபோன்று, எனது மனைவியும் தம்பி வேலைக்கு போகவில்லை. அவனை கண்டித்து வையுங்கள் என்று கூறுவார் .நான் கண்டித்தால் அவன் பயந்து விடுவான். இந்த உறவுமுறை என்னவென்று சொல்வது. தம்பியா மகனா உறவினரா இந்த உறவுமுறை என் மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது. இது என் மனதிலேயே இருந்தது. இதை வைத்து தான் இந்த கதையை உருவாக்கினேன்.