'குட்டிபுலி' மூலம் நடிகராக அறிமுகமானவர் சரவண சக்தி. இவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மேலும், ஜே.கே.ரித்தீஷ் நடித்த 'நாயகன்' ஆர்.கே.சுரேஷ் நடித்த 'பில்லா பாண்டி' ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
இவர் நடிகர் விமலுடன் இணைந்து MIK Productions No.1 சார்பில் தயாராகும் படத்தை இயக்க திட்டமிருந்தார். அப்படத்திற்கு 'குலசாமி' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டது. இருப்பினும், 'குலசாமி' என்று தற்காலிகமாக சூட்டப்பட்ட பெயரை கில்ட் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தார் சரவண சக்தி. மேலும், 25.01.2021 அன்று அப்படத்திற்காக பூஜையும் போடப்பட்டது. இப்படத்திற்கான தலைப்பு மற்றும் முதல்பார்வை போஸ்டரை விரைவில் வெளியிட இப்படக்குழு திட்டமிட்டிருந்தது.
ஆனால், சில நாள்களுக்கு முன்பு ராக் ஸ்டார் நடிக்கும் 'எங்க குலசாமி' என்று படத்தின் முதல் பார்வை போஸ்டருடன் அப்படத்தின் பத்திரிக்கை செய்தியும் வெளியானது. அந்த செய்தியை சரவண சக்தி படிக்கும்போது, தான் சிங்காரவேலனிடம் கூறிய கதையும் 'எங்க குலசாமி' படத்தின் கதையும் ஒரே மாதிரியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதற்கு முன் இவர் சிங்காரவேலனிடம், இருவரும் இணைந்து இப்படத்தை எடுப்போம் என்று கூறியதாகவும் அதற்கு சிங்காரவேலன் ஒப்புக் கொண்டதாகவும் அதற்காக இரண்டு நாள் அலுவலக வேலையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது இப்படத்தின் கதையை அவரிடம் நம்பிக்கையின் பெயரில் கூறியிருக்கிறார்.
பிறகு சில காரணங்களால் அவருடன் இணைந்து அப்படத்தை எடுக்க முடியவில்லை. ஆகையால், MIK Production (P) Ltd தயாரிப்பில் இப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்துவிட்டார். இப்போது அதே கதையை ராக் ஸ்டார் என்பவரை வைத்து சிங்கார வேலன் எடுக்கவுள்ளார் என்பதையறிந்த சரவண சக்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கில்டு மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.