தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எனக்கு சேர வேண்டிய திட்டுக்களை வாங்கியவர்; நேர்மையை தமிழர்கள் மத்தியில் நிரூபித்தவர் - சேரனுக்கு கிடைத்த புகழாரம் - இயக்குநர் சரண்

சேரனுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டு எனக்கு கிடைத்தது. எனக்கு கிடைக்க வேண்டிய திட்டுக்கள் அவருக்கு போய் சேர்ந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லா சூழலையும் நேர்மையான நெஞ்சுரத்துடன் உலகத் தமிழர்கள் முன்பாக மனம் திறந்து காட்டியவர் என இயக்குநர் சேரனை புகழ்ந்து தள்ளியுள்ளனர் இயக்குநர்கள் சரண் மற்றும் வசந்தபாலன்.

இயக்குநர்கள் சரண் மற்றும் வசந்தபாலன்

By

Published : Oct 16, 2019, 12:06 AM IST

சென்னை: ராஜாவுக்கு செக் படத்தில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இயக்குநர்கள் சரண் மற்றும் வசந்தபாலன், படத்தின் நாயகனாக நடித்துள்ள சேரனை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.


ராஜாவுக்கு செக் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் சரண் பேசுகையில்,

பல வருடங்களுக்கு மேலாக சேரனுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு உண்டு. எனது பெயருக்கும் அவர் பெயருக்கும் குழப்பங்கள் கூட ஏற்பட்டுள்ளது. என் படத்தை பார்த்து திட்டி எழுதிய கடிதங்கள் எல்லாம் அவருக்கு போய்விடும்.. அவர் படத்தை பாராட்டி அவருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் எனக்கு மாறி வந்தது எல்லாம் நடந்துள்ளது என்றார்.

இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது,

எனக்கு குழந்தை பிறந்த தருணத்தில் மட்டுமல்ல, அதன்பிறகு பல நாட்கள் வரை ஒரு நான் ஒரு அப்பா ஆகிவிட்டது போல உணர்ந்ததே இல்லை. ஆனால் ஒருமுறை என் குழந்தை கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோது மருத்துவமனையில் அவரை என் கைகளில் மூன்று மணி நேரம் தூக்கி வைத்துக்கொண்டே அமர்ந்திருந்தபோதுதான் நான் என்னை ஒரு அப்பாவாக முழுமையாக உணர்ந்தேன். என் கண்களிலிருந்து கண்ணீர் மட்டுமல்ல, சந்தோஷமும் பீரிட்டு வந்தது.

அந்த வகையில் இயக்குநர் சேரன் தனது படங்களில் காதலனாக நடிக்கும்போது கூட தன்னை அப்பாவாக காட்டுகிற ஒரு நடிகர் என்றுதான் சொல்வேன். இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது.

தன் இதயத்தையும் ஆன்மாவையும் திறந்து இந்த உலகத்தின் முன்னால் துணிச்சலாக நிற்கிற தைரியம் எனக்கு கிடையாது. ஆனால் தன் வாழ்க்கையில் மிக கஷ்டமான சூழல்களில் ஒரு அப்பாவாக தன் இதயத்தைத் திறந்து தன்னை நிலைநாட்டிக் கொண்ட மிக உன்னதமான மனிதர் சேரன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன் கலந்துகொள்ள உள்ளே சென்று விட்டார் என்று என் மனைவி சொன்னதும் எனக்கு பதட்டமாக இருந்தது. பாரதி கண்ணம்மாவும், பொற்காலமும் ஆட்டோகிராப் படமும் எடுத்த உன்னதமான கலைஞன் இவ்வளவு அலைக்கழிக்கின்ற ஒரு சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதுவே ஐரோப்பாவில் செய்திருந்தால், ஒரு தீவையே அன்பளிப்பாக கொடுத்து நிம்மதியாக இருங்கள் எனக் கூறியிருப்பார்கள். ஆனால் அவருக்கு வேறு வழி இல்லை. அதனால் பிக் பாஸில் போய் நிற்கிறார். அதனாலேயே ஒவ்வொரு நாளும் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பதட்டத்துடனே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் எல்லா சூழலையும் நேர்மையான நெஞ்சுரத்துடன் உலகத் தமிழர்கள் முன்பாக நான் உண்மையானவன், நேர்மையானவன் என மனம் திறந்து காட்டினார்.

கற்ப்பை நிரூபிப்பது போல நிஜமாகவே நூறு நாட்கள் நெருப்பில் நின்று தனது நேர்மையை நிரூபித்து வெளியே வந்ததற்காக அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details