'டார்லிங்', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கியுள்ள திரைப்படம் 'கூர்கா'. யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியில் இருக்கும் 'கூர்கா' பட இயக்குநர் சாம் ஆண்டனை நேரில் சந்தித்து பேசினோம்.
வாங்க என்று வரவேற்றவர், "ஹாய் எல்லோருக்கும் வணக்கம். யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள 'கூர்கா' படம் பக்கா கமர்ஷியல் என்டர்டெயினரா எடுத்திருக்கோம். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடிக்கிறது. இதுபோன்ற காமெடி படம் வந்து ரொம்ப நாளாச்சு" என பேச ஆரம்பித்தார்.
டைட்டில் வைக்க காரணம் என்ன?
கதைப்படியே ஹீரோ கூர்காவின் பிளட் லைனில் வந்தவர். அதனால் இந்த கதைக்கு 'கூர்கா' என்ற டைட்டில் ஆப்டாக இருக்கும் என்று நினைத்தோம். ஒரு சமூகத்தை பற்றி ஒரு சின்ன விஷயம் நம்ம சொல்லணும் என்று நினைத்தோம். அது மட்டுமல்ல நம்ம ஊரில் கூர்கா என்றால் தீபாவளிக்கு பொங்கலுக்கு காசு கேப்பாங்க.. நைட் ஆனா விசில் அடிப்பாங்க.. என்றுதான் நமக்கு தெரியும். அவங்க ஏன் இன்னும் பார்டர்ல காவலாளியா இருக்காங்க.. இங்கே வந்து ஏன் கூர்காவாக இருக்காங்க.. என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தோம். அதுதான் இந்த கூர்கா படம்.
இந்த படத்தின் கதை கூர்காவின் வரலாற்றைக் கூறும் படமா அல்லது யோகிபாபுவுக்காக எழுதினீர்களா?
கூர்கா சமூகம் குறித்த ஒரு ஆக்சன் படம் எடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். இந்த கதையை ஒரு காமெடியனாக வைத்து பொழுதுபோக்காக கூறினால் மக்களிடம் அதிகம் சென்றடையும். அதனால்தான் இந்த படத்திற்கு யோகிபாபு நடிக்க வைத்தோம். கதை எழுதும்போதே யோகி பாபு மனதில் வைத்து எழுதப்பட்ட கதை. ஒருவேளை இந்த கதையில் யோகிபாபு நடிக்க மறுத்து விட்டார் என்றால் இந்த கதையை வேற யாரையும் வைத்து எடுத்திருக்க மாட்டேன்.
இது எப்படிப்பட்ட படம்.. காமெடியா, த்ரில்லரா?
இது ஒரு திரில்லர் காமெடியும் என்று சொல்லலாம். ஹாலிவுட்டில் இது போன்ற படங்கள் நிறைய வந்திருக்கிறது. யோகிபாபுவை வைத்து இரண்டு படங்கள் செய்து இருக்கிறேன். அவருடைய காமெடி எனக்கு ஒர்க் அவுட் ஆனது. இந்த கதையில் மொத்த படத்தையும் அவர் தான் தாங்க வேண்டி இருந்தது. இது எனக்கும் அவருக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஒரு கதாநாயகனை வைத்து படம் எடுப்பதற்கும் ஒரு காமெடியனை வைத்து படம் எடுப்பதற்கும் இடையே கஷ்டம் உள்ளதா? இந்தக் கதைக்கு யார் நாயகன் என்று எப்பொழுதும் என் மனதில் இருக்கும்.
நாயை நடிக்க வைத்ததற்கான காரணம்?
இந்த படத்தில் யோகிபாபுவிற்கு சப்போர்ட்டாக ஒரு கேரக்டர் தேவைப்பட்டது. ஒரு வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்றால் யோகிபாபுக்கு சப்போர்ட் கேரக்டர் இருக்க வேண்டும் என்பதற்காக கதை எழுதும்போதே ஒரு நாயை வைத்து தான் எழுதினோம். இந்த படம் ஒரு ஃபன்னி யான படம். 'யு' சர்டிபிகேட் படம் என்பதால் குழந்தைகள் கண்டிப்பாக என்ஜாய் பண்ணுவார்கள். நான் இதுவரை ஆக்ஷனை வைத்து காமெடி பண்ணியது இல்லை. அது எனக்கு ஒரு புது அனுபவம்தான். அதனால் இதை குழந்தைகளும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.