விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் பிகில். பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. மேலும் இத்திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், யார் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அவர்களை அங்குதான் வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அவரின் இந்தப் பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யை விமர்சனம் செய்து இயக்குநர் சாமி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில் அவர் நடிகர் ரஜினிகாந்தை போன்று நடிக்க மட்டும் செய்யுங்கள். வாய் திறந்து பேச வேண்டாம். நீங்கள் பேசினால் தேவையில்லாத கருத்துகளை கூறி மாட்டிக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பது தெரியும். எனவே படத்தில் நடிப்பதை மட்டும் செய்யுங்கள். மேடையில் ஏறி பேசுவதை நிறுத்திவிடுங்கள். உங்களைவிட பல பெரிய ஆள்கள் உள்ளனர்.
இயக்குநர் சாமி வெளியிட்ட காணொலி தேவையில்லாமல் பேசி வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொள்ளாதீர்கள் என்றும் எச்சரித்த அவர், ஒருநாள் சாயம் வெளுக்கும், உண்மை வெளியேவரும் அப்போது எல்லோரும் கேவலப்பட வேண்டியிருக்கும் என்றும் பகிரங்கமாகக் கூறினார். மேலும் மேடையில் விஜய் தனது ரசிகர்களுக்கு கைகொடுத்துவிட்டு பின்னர் டெட்டால் போட்டு கைகளைக் கழுவுவதை தான் பார்த்ததாகவும் அந்தக் காணொலியில் இயக்குநர் சாமி குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. எனினும் திடீரென்று இயக்குநர் சாமி விஜய்யை இவ்வாறு கடுமையாக விமர்சித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குநர் சாமி இயக்கத்தில் வெளியான உயிர், சிந்து சமவெளி, மிருகம் உள்ளிட்ட திரைப்படங்கள் சர்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.