சென்னை: ஞாயிறு அன்று வீடுகளிலுள்ள மின்விளக்குகளை அணைத்துவிட்டு, 9 நிமிடங்கள் அகல்விளக்குகளை ஏற்றுமாறு மோடி விடுத்த வேண்டுகோளுக்கு மேயாத மான் இயக்குநர் தனது தரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (ஏப்.3) காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலமாக வெளியிட்ட செய்தியில், “ஏப்ரல் 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைவரும் தங்களின் வீடுகளிலுள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்”என்று கேட்டுக்கொண்டார்.
பிரதமரின் இந்த வேண்டுகோளை சமூகவலைதளத்தில் மீம்ஸ் கிரியேட்டர்ஸூம் நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர். இதற்கிடையில் இது குறித்து 'மேயாத மான்', 'ஆடை'ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், "வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு, முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை, விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான்இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த ட்வீட்டை நெட்டிசனகள் பலர் ஆதரவு தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர். இயக்குநர் ரத்னகுமார் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'மாஸ்டர்' படத்தில் பணியாற்றியுள்ளார்.
இதையும் படிங்க:கரோனா வைரஸ்: விழிப்புணர்வு பாடல் எழுதிய இயக்குநர்