விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில், இயக்குநர் ரத்னகுமாரின் ட்விட்டர் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
'தளபதி' விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் நயன்தாரா, இந்துஜா, கதிர், அமிர்தா, வர்ஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து விஜய்யை 'கைதி' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சஞ்சீவ், சாந்தனு உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்துவரும் இப்படத்துக்கு ‘மாஸ்டர்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று நெய்வேலியில் நடைபெற்று வந்த 'மாஸ்டர்' படப்பிடிப்பில் இருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். பின் அவரது வீட்டையும் சோதனையிட்டனர். ஆனால் அவரது வீட்டில் இருந்து ரொக்கம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என வருமான வரித்துறையினர் அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவுக்கு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த ட்வீட் தற்போது விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகியும் வருகிறது
தனது ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதும் விஜய் குட்டி கதையோடு அரசியல் கருத்துகளையும் பேசிவருகிறார். மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து பேசுவார் என்ற எதிர்பார்ப்பில் ரத்னகுமார் இப்படி ட்வீட் செய்திருக்கலாம் என இணையவாசிகளும் ரசிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ரத்னகுமார் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் பணிபுரிந்துவருவது குறிப்பிடத்தக்கது.