ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் 'சென்னையில் திருவையாறு' எனும் கர்நாடக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாரம்பரிய இசைகளைக் காக்கும் வகையில் பிரத்யேக நிகழ்ச்சியாக 'மார்கழியில் மக்களிசை' எனும் நிகழ்ச்சியினை இயக்குநர் பா.இரஞ்சித் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறார்.
இதில் பறையிசை, ஒப்பாரி, நாட்டுப்புறப்பாடல், கானா பாடல் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. கிளாசிக்கல் இசைகளுக்கு இணையான முக்கியத்துவம், விழிப்புணர்வு ஆகியவை கிராமிய மற்றும் நாட்டுப்புற இசைகளுக்கு கிடைப்பதில்லை என்பதால், இந்நிகழ்ச்சியை நடத்துவதாகவும் அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இசையில் கூட ஏற்றத்தாழ்வு பார்ப்பதை ஏற்க இயலாததாலேயே இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. 'மார்கழியில் மக்களிசை 2021' நிகழ்ச்சியானது மதுரை (டிசம்பர் 18), கோவை (டிசம்பர் 19), சென்னை (டிசம்பர் 24 - 31) உள்ளிட்ட இடங்களில் நடைபெறவுள்ளதாக, பா. இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் இசைக்கலைஞர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.
நிகழ்ச்சியில் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க:'டேலண்ட் இருக்கா? கலந்துக்கங்க...'; ராக்கி படக்குழுவின் அசத்தல் அறிவிப்பு!