சென்னை: உலகின் இளைய மற்றும் எளிய மொழியான கிளிக்கி மொழியைக் கற்றுக்கொள்ளுமாறு கூறி, உலக தாய்மொழி தினத்தில், கிளிக்கி மொழிக்கான இணையதளத்தை வெளியிட்டார் 'பாகுபலி' இயக்குநர் ராஜமெளலி.
இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை புரிந்த 'பாகுபலி' சீரிஸ் படங்களில் பல்வேறு பிரமாண்டமான விஷயங்களும் சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. இதில், காலக்கேயர் மன்னராக இங்கோஷி என்ற கதாபாத்திரத்தில் தோன்றிய பிரபாகர் பேசிய கிளிக்கி மொழி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
படத்தில் இடம்பெறும் சில காட்சிகளுக்காக எழுதப்பட்ட இந்த மொழியை, ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு முழுவதுமாக உருவாக்கியுள்ளார் படத்தின் வசனகர்த்தாவும், எழுத்தாளருமான மதன் கார்க்கி. தற்போது அதற்கென்று பிரத்யேகமாக இணையத்தளம் ஒன்றையும் வடிவமைத்துள்ளார்.
உலக தாய்மொழி தினமான இன்று (பிப்ரவரி 21) கிளிக்கி மொழிக்கான மதன் கார்க்கி வடிவமைத்த இணையதளத்தை வெளியிட்டுள்ளார் 'பாகுபலி' சீரிஸ் படங்களின் இயக்குநர் ராஜமெளலி.
Rajamouli launched official website for kiLiKi language இதுகுறித்து ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சிறப்பான ஆராய்ச்சிகள் செய்து 'பாகுபலி' படத்தின் கிளிக்கி மொழியை மதன் கார்க்கி உருவாக்கியுள்ளார். உலகின் இளயை மற்றும் எளிய மொழியான கிளிக்கி மொழியை தற்போது அனைவரும் கற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு, அந்த இணையதளத்தின் இணைப்பையும் பதிவிட்டுள்ளார்.
கிளிக்கி மொழியைப் பேசி நய்யாண்டி செய்யும் விதமாக சில படங்களில் நகைச்சுவை காட்சிகளும் இடம்பிடித்து ரசிகர்களைக் கவர்ந்த அந்த மொழி பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பேசுவதற்கும், உச்சரிப்பதற்கும் புதுமையாக இருந்த இந்த மொழியைப் பாடலாசிரியரும், வசனகர்த்தாவுமான மதன் கார்க்கி 'பாகுபலி' படத்துக்காக உருவாக்கியிருந்தார்.
இதையடுத்து அவர் இந்த மொழியின் முழு வடிவத்தையும் உருவாக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டிருந்தார். தனது கார்க்கி ரிசர்ச் பவுன்டேஷன் சார்பில் இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த அவர், தற்போது உலக தாய்மொழி தினத்தில் புதிய மொழியை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.