ஹிந்தியில் பல படங்களை இயக்கிய பதம் குமார், தற்போது மீண்டும் பட தயாரிப்பிலும் இயக்கத்திலும் கவனம் செலுத்த உள்ளார். பதம் குமார், 'புரியாத புதிர்', 'ஆக்கோ' ஆகிய படங்களின் தயாரிப்பாளர் தீபன் பூபதியும் இணைந்து மூன்று படங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்.
முதல் படத்தில் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் பிரபலமான முக்கிய நடிகர் ஒருவரும், அவருக்கு ஜோடியாக மூன்று நாயகிகளும் நடிக்க உள்ளார்களாம். திருமணமான ஒரு நபரின் வாழ்க்கையில் முன்னாள் காதலியும் இன்னொரு பெண்ணும் நுழைய அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை மியூசிக்கல் த்ரில்லராகச் சொல்வது தான் இப்படத்தின் கதை என கூறப்படுகிறது. இந்தப் படத்தை பதம் குமாரே இயக்குகிறார்.
இதேபோன்று கதாநாயகியை மையமாகக்கொண்டு உருவாக உள்ள ஆக்ஷன் படத்தை தயாரிக்க உள்ளார் பதம் குமார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது. இந்தப் படத்திற்கு விஸ்வரூபம் படத்தில் ஆக்ஷன் பணிகளை கவனித்த கேஷா என்பவர் ஸ்டண்ட் பணிகளை மேற்கொள்ள உள்ளார்.